அமரர்.திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களுக்கு இதயவணக்கம்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி

308 0


அமரர்.திருமதி.ஜெயந்தி கீதபொன்கலன்
பிறப்பிடம்:மந்துவில்-யாழ்ப்பாணம், தமிழீழம்
வதிவிடம்:வூப்பெற்றால்  (Wuppertal-Germany)

தமிழீழத் திருநாட்டின் அழகிய நந்தவனச் சோலையாகத் திகழும் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிக் கோட்டத்தின் மந்துவில்க் கிராமத்திலிருந்து போர்தின்ற வாழ்வைச் சுமந்து புலம்பெயர்ந்து, யேர்மனிய தேசத்தின் வூப்பெற்றால் நகரத்தில் ஓய்வற்ற உழைப்பின் உள்ளமாய் வாழ்ந்து எல்லோராலும் அறியப்பட்ட ஜெயந்தியெனும் ஓர் ஆளுமை மிக்க உறவை இயற்கை தன்னோடு அணைத்துக்கொண்ட செய்தியறிந்து ஆழ்துயர் கொள்கின்றோம். மானுட வாழ்வின் மகத்தான பக்கங்களை பொதுவாழ்வின் களத்திலே செலவிடச் சித்தமாக இருந்து தேசப்பணியாற்றிய இப்பெருமாட்டியின் பிரிவைச் சுமந்து ஒவ்வொரு இதயங்களும் கனத்துக் கண்ணீர் சொரிகின்றது.

புன்னகைக்கும் நிறை பண்புக்கும் இலக்கணமான ஓர் அழகிய குடும்பத்தின் தலைவியாக, அன்பால் நிறைந்த கணவனோடும் தம் வசந்தகாலக் குயில்களாக இரண்டு பிள்ளைச் செல்வங்களோடும் தனது வாழ்வைச் செலவிடாது, தாயகத்தின் சுதந்திர வாழ்வை நோக்கிய உன்னதமான பணிகளிலே இதயசுத்தியோடும், உறுதியோடும், நம்பிக்கையோடும் தன்னை இணைத்துப் பயணித்தார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதான உப அமைப்பான தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட வூப்பெற்றால் நகரத் தமிழாலயத்தில் தன்னை ஆசிரியராக இணைத்துத் தொடர்ச்சியாக எமது மாணவர்களின் தமிழ் விருத்திக்காக மன நிறைவோடும், மகிழ்வோடும் பணியாற்றி, மாணவர்களின் விருப்பத்திற்குரிய உறவானார்.

யேர்மனிய தமிழ்ப் பெண்கள் அமைப்பின் உறுப்பினராக 2005 ஆம் ஆண்டு தன்னை இணைத்து, முழுமனதோடு பணியாற்றினார். பின்பு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் பணியை ஏற்றுக்கொண்டு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் அனைத்துக் கடமைகளிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். யேர்மனிய தமிழ்ப் பெண்கள் அமைப்பினால் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக யேர்மனிய தேசம் தழுவிய வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆடற்கலையின் உச்சம் தழுவிய ‘வாகை மயில்’ எனும் மாபெரும் நடனப் போட்டியின் பொறுப்பாளராக அச்செயற்பாட்டின் மையமாக நின்று செயற்பட்டதோடு, சமூகத்தின்பால் ஈர்ப்பும் கொள்ள வைத்தார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை உலகிற்கும், வாழ்விட மொழியாளர்களுக்கும் உணர்த்தும் மற்றுமோர் அறவழி அடையாளமாக, யேர்மனியின், டுசில்டோர்வ் நகரில் 2009 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பெற்ற சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலே தமிழ்ப் பெண்கள் அமைப்பின் சார்பில் தன்னையும் ஒருவராக ஈடுபடுத்தி தனது உறுதியை வெளிப்படுத்தினார். பெண்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பெற்ற ‘விடுதலைக் காந்தள் ‘ எனும் இசை வாத்தியங்களுக்கிடையிலான போட்டி மற்றும் பாடற் போட்டிகளை வெற்றிகரமாக கொண்டு செல்வதிலும், அதற்கான வழிகாட்டுதல் ஒழுங்கமைப்பிலும் நிறைவான பங்காற்றினார். இத்தகைய மகத்தான பணிகளின் அடையாள நாயகிக்கு புகழ்வணக்கம் செலுத்தும் அதேவேளையில், இவரது பிரிவுத் துயர் சுமந்து வாடும் குடும்ப மற்றும் அனைத்து உறவுகளோடும் நாமும் துயரினைப் பகிர்ந்து, ஜெயந்தி அவர்கள் தாங்கிச் சுமந்த தாயகப் பணியை அவர் நினைவோடு ஏற்றுத் தொடர்வோமென உறுதியெடுப்போமாக.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.