வெள்ளை நிற அல்பினோ வகை எருமை: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்

15 0

வேலாயுதம்பாளையம்:கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (55). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று சினை பிடிக்காததால், கால்நடை மருத்துவரை அணுகி, சினை ஊசி போட்டுள்ளார்.

இதன் காரணமாக எருமை மாடு சினையானது. உரிய நாட்களுக்கு பின்னர் அந்த எருமை, கன்று ஒன்றை ஈன்றுள்ளது. எருமை ஈன்ற கன்றை பார்த்த முருகேசன் ஆச்சரியம் அடைந்துள்ளார்.

காரணம் அந்த கன்று வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த கன்றை மிகவும் கவனமாக அவர் வளர்த்து வருகிறார்.இந்நிலையில் வெள்ளை எருமை மாட்டை பார்ப்பதற்கு நாள்தோறும் அப்பகுதி மக்கள் விவசாயினுடைய வீட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் முருகேசன் வீட்டில் எப்போதும் பொருட்காட்சி நடப்பதை போல கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இளம் வாலிபர்களும், பெண்களும் வெள்ளை எருமையுடன் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து கால்நடை வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த முதியவர் ஒருவர் கூறும்போது:-சினை பிடிப்பதற்காக போடப்படும் ஊசி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அவ்வாறு வந்த ஊசியில், வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம். எனவே எருமை வெள்ளையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மருத்துவரீதியாக இதற்கான காரணம் மெலனின் என்று சொல்லப்படுகிறது.

உடம்பில் மெலனின் சுரக்காதபோது இவ்வாறு வெண்மை நிறம் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. இப்படிப் பிறக்கும் விலங்குகளை அல்ஃபினோ வகை விலங்குகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 10 ஆயிரத்து ஓர் உயிரினம் இப்படிப் பிறப்பதாக அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.