குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதித்தல், விநியோகித்தல் மற்றும் விநியோகித்தாதிருத்தல் ஆகிய அதிகாரங்களை சர்வதேச நிறுவனத்துக்கு வழங்கவில்லை. சரியான முறையில் தெளிவைப் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் எழுந்துள்ள தவறான கருத்துக்களை நீக்கி புதிய செயற்திட்டத்துக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கின்ற அங்கிகாரத்தை அதாவது இலத்திரனியல் பயண அங்கீகாரம் எனும் நிகழ்ச்சித் திட்டம் இணைய வழியில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த முறைமையின் கீழ் வெளிநாட்டவர்களிடமிருந்து எழுத்துக்களுடனான தரவுகள் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்பட்டன.
இதன் பின்னர் இந்த நிகழ்ச்சித் திட்டமானது திணைக்களத்தின் தொழில்நுட்ப தேவைகளுக்கு பொருத்தமான வகையில் உரிய காலத்தில் இற்றைப்படுத்தாத காரணத்தால் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான தேவை தோற்றம் பெற்றது.
புதிய விசா முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தேவைப்பாடானது மேலும் தீவிரமடைந்தது. அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் 17 புதிய விசா முறைமை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விசா முறைமைகளில் பெரும்பாலானவை நீண்ட காலத்துக்கு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு சார்பானதாக அமைந்ததுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் திணைக்களத்தின் பொறுப்புக்கு இந்த ஒவ்வொரு விசா வகைகளும் போதியளவிலான ஆவணங்களை இணைய வழியில் பெற்றுக் கொள்ளல் மற்றும் அவற்றின் செம்மைத் தன்மையை உறுதிப்படுத்தி கொள்வதற்கு அவசியமாக அமைந்தன.
விசா வழங்கும் போது திணைக்களம் எதிர்கால சவால்களை வெற்றிக் கொள்வதற்கான தடைகளை இனங்காணல்
திணைக்களத்தால் பயன்படுத்தப்பட்ட ‘இ.டி.எ’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடக இற்றைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படாததால் மேற்குறிப்பிட்ட நிலைமைகள் மேலும் தீவிரமடைந்தன. விண்ணப்பதாரியின் புகைப்படங்கள்,கடவுச்சீட்டின் நிகழ் பிரதிகள்,வேறு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இணைய வழியில் முறைமைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமை,காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் வினைத்திறனற்ற சேவையாக மாறியமை,இந்த முறைமையை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பமின்மை,பல்வேறு சந்தர்ப்பங்களிவ் ஏற்படுகின்ற செயலிழப்புக்களை உடனடியாக சீர் செய்வதற்கு தேவையான வசதிகள் இன்மை,பன்மொழி அமைப்பு மையத்தின் வசதி காணப்படாததால் ஆங்கில மொழியைப் பயன்படுத்தாத சுற்றுலா பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாதல்,விசா மற்றும் விசா தொடர்பான சேவைகளை வழங்கல்,ஏனைய சர்வதேச சேவைகளுடன் ஒப்பிடுகையில் பலவீனமானதொரு சேவையாக காணப்படல்.
இலங்கையில் மாத்திரம் நடைமுறையில் உள்ள முறை என்பதால் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததன் கரணமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான விளம்பரம் இல்லாததால் ஏனைய நாடுகளைப் போன்று இதனை ஓர் உத்தியாகப் பயன்படுத்த முடியாமை,இவ்வாறான சிக்கல்களினால் இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு மிகப் பொருத்தமான நிறுவனமொன்றை பயன்படுத்துவது திணைக்களத்தின் பிரதான எதிர்பார்ப்பாக அமைந்தது.இதன் பொருட்டு வி.எப்.எஸ்.நிறுவனத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற முன்மொழிவானது அமைச்சரவையின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட்ட குழுவுக்கு முன்வைக்கப்பட்டது.
வி.எப்.எஸ்.நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவது
புதிய விசா அறிமுகப்படுத்தல் செயற்திட்டத்தை இந்த நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் போது விசாவுக்கான அனுமதிக்காக ஏற்புடைய ஆவணங்களை அனுப்புவதற்கு இணைய வழியில் விண்ணப்பதாரியிடமிருந்து பெற்றுக்கொண்டு,திணைக்களத்திடம் சமர்ப்பித்தல்,அதற்கான இணையத்தளத்தை உருவாக்குதல்,பேணல் மற்றும் பராமரித்தல்,ஏற்புடைய ஆவணங்களை இணைய வழியில் அனுப்புவதற்கு முன்னர் விண்ணப்பதாரியினால் சமர்ப்பிக்கப்படும் அனைத்து தகவல்களையும் தரப்பரிசோதனை செய்தல்,ஏற்புடைய விசாவுக்கான அனுமதியை வழங்கிய பின்னர் பொதுத்தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஜி.டி.ஆர்.பி)பிரகாரம் தரவுகளை உரிய தொகுதியில் இருந்து முறையாக அழித்து விடல் வேண்டும்.
இவ்வாறான சேவைகளை பெற்றுக் கொள்வதுடன் 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியர்வு சட்டத்தின் பிரகாரம் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதித்தல்,விநியோகித்தல் அல்லது விநியோகிக்காமலிருத்தல் அதிகாரம் இந்த நிறுவனத்துக்கு வழங்கவில்லை.இந்த புதிய செயற்திட்டம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.ஆகவே தவறான கருத்துக்களை நீக்கி இந்த புதிய செயற்திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

