இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

141 0

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா – கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று (06) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

தாக்குதலுக்குள்ளான நபர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ‘பொலிஸார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்’, ‘பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே’, ‘பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்’ என்றவாறு கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பாக 10 பேரை அழைத்துப் பேசியிருந்தார்.

இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

கடந்த மாதம் 15ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரை புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட சில பொலிஸார் பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அந்த தந்தையை தாக்கியிருந்தார்.

தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.