குவைத் சிறையில் இருக்கும் 4 பேரை மீட்க கோரி மீனவர்கள் கடலில் ஆர்ப்பாட்டம்

20 0

குவைத் நாட்டு சிறையில் இருக்கும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 4 பேரை மீட்க வலியுறுத்தி, கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (22), சேசு (24), மோர்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (20), பாசிபட்டினத்தைச் சேர்ந்த வினோத்குமார் (27) ஆகிய 4 மீனவர்களும் குவைத் நாட்டில் மீன்பிடி ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றினர்.

இவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, போதைப் பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். படகின் ஓட்டுநரான எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் போதைப் பொருள் வைத்திருந்ததாகவும், அவர் ஈரான் நாட்டினருடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்ததும் பின்னர் தெரியவந்தது.

போதைப்பொருள் கடத்தலில் தொடர்பில்லாத ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 4 பேரையும் மீட்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டநாட்டுப்படகு மீனவர்கள், ராமநாதபுரம் அருகே மோர்பண்ணை பகுதியில் கடலில் இறங்கி நேற்று கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி தலைமை வகித்தார். மோர்பண்ணை கிராமத் தலைவர் ராஜதுரை, போராட்ட ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவாஜி, கடல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டனர்.