நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

20 0

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை மே 13ஆம் திகதி ஆரம்பமாகலாம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

இந்த கப்பல் சேவையை தனியார் நிறுவனமே இயக்கவுள்ளது. இந்தியாவின் ஷிப்பிங் கோர்ப்பரேசனும் இலங்கை அரசாங்கமும் இணைந்து இந்த நிறுவனத்தை தெரிவுசெய்துள்ளன.

இந்த சேவையை மலிவானதாகவும் பொதுமக்களுக்கு ஏற்ற விதத்திலும் வழங்குவதற்காக ஒரு வருடகாலத்துக்கு மாதத்துக்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் பொருந்தும் இயக்கச் செலவை இந்திய அரசாங்கம் ஏற்க முடிவு செய்துள்ளது.

பயணிகள் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் வரியை குறைப்பதற்கு இலங்கை அரசாஙகம் தீர்மானித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் 63.35 மில்லியன் டொலர்களை உதவித்தொகையாக வழங்க தீர்மானித்துள்ளது.

முன்னர் இந்த நிதியை கடனாக வழங்கவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் செழிப்புக்கான அதன் பயணத்துக்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதத்திலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஜூலை 2023இல் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார பங்காளித்துவத்துக்கான தொலைநோக்கு ஆவணத்தின் முக்கிய அங்கமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பை வலுப்படுத்துதல் முக்கிய அம்சமாக காணப்படுகின்றது.

கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவது இந்திய அரசின் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை உறுதிப்படுத்துவதாகும்.

ஒக்டோபர் 2023இல் இந்த சேவையை அறிமுகப்படுத்தியபோது பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது கருத்துக்களில் இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்ல, நாடுகளையும் அதன் மக்களையும் நெருக்கமாகக் கொண்டுவருவதாகும். 2023 செப்டெம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள பு20 உச்சிமாநாட்டின்போது ஆரம்பிக்கப்பட்ட இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் மூலம் இலங்கை மக்கள் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.