10-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்து புதிய பாடம்: ‘பன்முக கலைஞர்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது

30 0

பள்ளிக்கல்வியின் 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த தகவல்கள் ‘பன்முகக் கலைஞர்’ என்ற தலைப்பில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய குறிப்புகள் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேரவையில் அறிவித்திருந்தார்.அதன்படி கடந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதி பற்றிய தகவல்களை பள்ளிக் கல்வித் துறை சேர்த்திருந்தது. அதில் ‘செம்மொழியான தமிழ் மொழி’ எனும் தலைப்பில் தமிழ் மொழிக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

அதைத் தொடர்ந்து தற்போது 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதியின் சிறப்பு திறன்கள் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன. இது, வரும் கல்வியாண்டு (2024-25) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ் புத்தகத்தின் உரைநடைப் பகுதியில் ‘பன்முகக் கலைஞர்’ என்ற தலைப்பில் அந்த பாடம் இடம்பெற்றுள்ளது. அதில் நாடகம், திரை,இதழியல், மொழி உட்பட பல்வேறு துறைகளில் கருணாநிதி ஆற்றிய பங்களிப்புகளின் சிறப்பம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தம் 11 குறுந்தலைப்புகளில் அவரைப் பற்றிய தகவல்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

மேலும், பாடத்தின் இறுதியில் கருணாநிதியின் கையெழுத்தும், ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.