சகல விதங்களிலுமான உடலியல் ரீதியான தண்டனைகளைத் தடைசெய்வதற்கு அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்திய மிகமுக்கிய நடவடிக்கையாக அமையும் என பாராட்டு வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனிசெப் அமைப்பின் இலங்கை கிளை அலுவலகங்கள், இத்தீர்மானத்தை வெகுவிரைவில் நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுப்பார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
செவ்வாய்கிழமை (30) உடலியல் ரீதியான தண்டனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சர்வதேச தினமாகும். அதனை முன்னிட்டு இலங்கையில் உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முற்றாகத் தடைசெய்யும் விதமாக முன்மொழியப்பட்டுள்ள தண்டனைச்சட்டக்கோவைத் திருத்தத்தை தாமதமின்றி அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறும், அதனை உடனடியாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதை இலக்காகக்கொண்டு வைத்திய கலாநிதி துஷ் விக்ரமநாயக்கவின் தலைமையில் இயங்கிவரும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான நிதியமும் (Stop Child Cruelty Trust), அவரது ஒருங்கிணைப்பில் இயங்கும் சிறுவர் பாதுகாப்புக் கூட்டமைப்பும் (Child Protection Alliance) இணைந்து, பல்வேறு துறைகளிலும் பிரபலமான மேலும் 19 பேரையும் உள்வாங்கி, ‘நோ குட்டி 2.0’ (NoGuti 2.0 – சிங்கள சொற்பதமான இது தமிழில் ‘அடி வேண்டாம்’ எனும் அர்த்தத்தை வழங்கும்) எனும் சமூகவலைத்தள பிரசாரமொன்றை ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (30) வரையான 30 நாட்களுக்கு முன்னெடுத்துவந்தன.
தண்டனைச்சட்டக்கோவைத் திருத்தத்தை பிரதானமாக வலியுறுத்தும் அப்பிரசாரம் செவ்வாய்க்கிழமை (30) முடிவுக்குவந்த நிலையில், திங்கட்கிழமை (29) இரவு 11.00 மணியளவில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச்செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சகல விதமான உடலியல் ரீதியான தண்டனைகளையும் தடைசெய்வதற்குரிய தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைக்கோவைத் திருத்தங்களுக்கு திங்கட்கிழமை (29) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
‘ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தின் 19 ஆம் பிரிவானது சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளிலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படவேண்டுமென வலியுறுத்துகின்றது. அதேபோன்று சிறுவர் உரிமைகள் தொடர்பான குழுவானது உடலியல் ரீதியான தண்டனைகள் தடைசெய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எனவே இந்த அமைச்சரவை ஒப்புதலானது இலங்கையில் சிறுவர்கள் அனைவரும் எந்தவொரு உடல் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளுக்கும் உள்ளாகாதிருப்பதை சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும்’ எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் தனது பாராட்டை வெளிப்படுத்தியிருக்கும் ‘நோ குட்டி 2.0’ (NoGuti 2.0 ) எனும் சமூகவலைத்தளப் பிரசாரத்துக்குத் தலைமைதாங்கிய துஷ் விக்ரமநாயக்க, தேர்தல்களுக்கு அழைப்புவிடுப்பதற்கு முன்னதாக இச்செயன்முறையைப் பூரணப்படுத்தி, அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப்பெற்று, செயற்திறனான அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இத்தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்ச், ‘சகல விதங்களிலுமான உடலியல் ரீதியான தண்டனைகளைத் தடைசெய்வதற்கு அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கின்றேன். பாராளுமன்றத்தின் ஊடாக இத்திருத்தங்கள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கின்றோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் நலனுக்கே அதியுயர் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தில் இலங்கையிலிருந்து சிறப்பான செய்தியொன்று கிடைத்திருப்பதாக இலங்கையிலுள்ள யுனிசெப் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது சிறுவர் உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்திய மிகமுக்கிய நடவடிக்கையாக அமையும் எனவும் அவ்வலுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

