நாட்டில் மீளவும் இருண்ட யுகம்: மின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை!

126 0

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் மின் கட்டணத்தை தீர்மானிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் முயற்சிப்பது முறையற்றது என இலங்கை மின்சாரசபை மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஸ்க பராக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயல்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

மின்சார சபையை 12 ஆக கூறுபடுத்தி அதன் உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு உரித்தாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் பெறும் இலாபத்துக்கு அமைய மின் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுவது பாரதூரமான நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

மின் சட்டத்தை திருத்தம் செய்வதுடன் மின் கட்டமைப்பில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வகிபாகத்தை வரையறுப்பதற்கும்

இச்சட்டமூலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நியாயமற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு இடமளிக்காததால் ஆணைக்குழுவின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாட்டின் மின் கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.