குறுகிய மனப்பான்மையில் இருந்து கொண்டு, நாம் தான் சிறந்தவர்கள், நாமே சிறந்ததைச் செய்கிறோம் என்ற எண்ணப்போக்கு நாட்டிற்கும் குடிமக்களுக்கும் நல்லதல்ல. முறைமையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அரச பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் கணினிக் கல்வி போதிக்கப்பட வேண்டும்.
போலி மார்க்சிஸவாதிகள், கம்யூனிஸவாதிகள், பாசிசவாதிகள், தீவிர சோசலிச தலைவர்களை நம்பி ஏமாறாதீர்கள். இவர்களது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைகளிலும், தனியார் பாடசாலைகளிலும், சர்வதேச பல்கலைக்கழகங்களிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் இந்த வாய்ப்பு பொது பரப்பில் இல்லை என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வர அரச அதிகாரம் தேவையில்லை. மக்கள் கோரிய முறைமையில் மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே கொண்டுவந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 167 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, பெலியத்த, ஒகேவெல வடக்கு, கனுமுல்தெனிய மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், பாடசாலையின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினரின் தேவைப்பாடுகளுக்காக ஒரு இலட்சம் ரூபா நிதியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
ஒரு பொய்யால் ஏமாற்றப்பட்டு நாடு வங்குரோத்தடைந்து, 100 பில்லியன் டொலர்களுக்கு மேல் கடன் பட்டுள்ளோம். இதனை வெற்றி கொள்ள வேண்டுமானால், தகவல் தொழில்நுட்பக் கல்வியும்,தொழிலை அடிப்படையாகக் கொண்ட கல்வியும் வகுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
76 வருட கால வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து பணியாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே. மக்களுக்காக இந்தளவு பணிகளை வேறு எந்த எதிர்க்கட்சியும் மேற்கொண்டதில்லை. இவ்வாறு செயற்படாதவர்கள் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவாதாக கூறுவது கேலிக்கூத்தானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒரு சில துறைகளைத் தவிர, பெரும்பாலான பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. இதற்கு கல்வியில் உள்ள பிரச்சினையே காரணம். தனியார் பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்சினைகள் இல்லை. இந்த தவறை சரி செய்து, அலைகளுக்கு அடிபட்டுச் செல்லும் பயணத்தை இப்போதே நிறுத்த வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

