ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடனான விருந்தை திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை

20 0

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அவருடனான இராப்போசண விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்க வில்லை என்பது போல் போலி செய்திகள் பரப்பப்படுவதாக கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசியல் நோக்கம் கொண்ட இத்தகைய செயற்பாடுகள் கண்டனத்துக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடனான இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்காமை தொடர்பில் ஊடகங்களில் பரப்பப்படும் போலி செய்தியை வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கைக்கான விஜயத்தின்போது ஈரான் ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்திய உத்தியோகபூர்வ கடிதம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தினால் ஈரான் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த இராப்போசண விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்கவில்லை என்பது போல் அடிப்படையற்ற போலி செய்திகள் ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இது முழுமையான அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட முயற்சியாகும்.

மேலும் ஈரான் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட இராப்போசண விருந்தில் பங்கேற்றிருந்தால், ஜனாதிபதி ரணிலுடன் எதிர்க்கட்சி தலைவர் அரசியல் பேரம் பேசினார் என்ற போலி செய்தியை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனை முன்கூட்டியே அறிந்திருந்தோம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஈரான் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு மக்கள் இலங்கையுடன் கொண்டுள்ள நீண்டகால நட்புறவை கௌரவிப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.