தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவது குறுகிய அரசியல் : தெற்குடன் இணைந்த வேட்பாளர் சாத்தியம் – சட்டத்தரணி சுவஸ்திகா

23 0

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்ப்பு வாக்கு அரசியலில் இருந்து மீள்வதுடன் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு எமது  உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வல்லமை அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் தேர்தல் காலங்களில் எவ்வாறு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது தொடர்பான இக்கலந்துரையாடலின் பின்னர் அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது :

தமிழ் பேசும் மக்கள் இவ்வளவு காலமும் எதிர்ப்பு வாக்குகளில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இனிவரும் காலங்களில் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு தமது உரிமைகளை பெற முடியும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. நானும் அதை வரவேற்பேன். ஆனால், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்துவது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமற்ற விடயம்.

ஏனெனில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்வியே.

தமிழ் பொது வேட்பாளரை நியமிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும்.

ஆகவே, தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வாக்கு அரசியல் முன்னெடுப்பதை நிறுத்தி, தெற்கு மக்களுடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவார்களாயின், தமிழ் மக்கள் சார்ந்து பிரச்சினைகளின் சாதகமான நிலைப்பாட்டினை அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.