நாட்டு மக்களைக் கேலிக்கூத்தாக்கும் மைத்திரி கைதுசெய்யப்பட வேண்டும்

17 0

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நான் அறிவேன் என்று குறிப்பிட்டுக் கொண்டு மைத்திரிபால சிறிசேன வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பொய் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பையும்,நாட்டு மக்களையும் கேலிக்கூத்தாக்கி,இல்லாத பிரச்சினையைத் தோற்றுவிக்கும் இவரைக் கைது செய்ய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற  உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தி அரசியல் இலாபம் தேட ஒரு தரப்பினர் முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவாதத்தில் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளின் பெயர், பாதுகாப்பு  விவகாரங்களுடன் தொடர்புடைய தகவல்கள் குறிப்பிடப்படுவதை அவதானிக்க முடிகிறது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டின் புலனாய்வு பிரிவு  பலவீனப்படுத்தப்பட்டது.நல்லாட்சி அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தையும்,புலனாய்வு பிரிவையும் காட்டிக் கொடுத்தது.இதனைப் பயங்கரவாதி சஹ்ரான் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

தேசியப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும் வகையில் புலனாய்வு அதிகாரிகளின் பெயர்களைப் பகிரங்கப்படுத்துவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.புலனாய்வு பிரிவு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின்  பாராளுமன்றத்தின் ஊடாக விசேட பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும்.அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இவ்வாறான விசேட பொறிமுறை  காணப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன பற்றி பேசாமல் இருப்பது இந்த விவாதத்தில் பிரதான குறைபாடாகக் காணப்படும்.உண்மையான சூத்திரதாரியைத் தான் அறிவதாக இவர் குறிப்பிட்டார்.இவரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தினோம்.ஆனால் கைது செய்யப்படவில்லை.

பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி அறிந்தும் அதனை மறைப்பது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 07 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

குண்டுத்தாக்குலை யார் நடத்தியது என்பதைத் தான் அறிவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு மைத்திரிபால சிறிசேன  குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் முற்றிலும் பொய்யானது.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சி.ஐ.டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.அவற்றை ஆராய்ந்த நீதவான் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அதனைப் பாதுகாத்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பையும்,நாட்டு மக்களையும் கேலிக்கூத்தாக்கும் வகையில்  கருத்துக்களைக் குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.