அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருவார்கள் : நம்பிக்கை தெரிவித்த சிறீரங்கேஸ்வரன்

27 0

அபிவிருத்தி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும் அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (23.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு தன்னுடன் இணைந்து பயணிப்பவர்களுக்கு மட்டும் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியிலிருந்து ஒதுக்கீட்டை செய்து கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் குறித்த கூற்றை ஏற்று தற்போது அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுள்ளனர்.

ஈ.பி.டி.பியினராகிய நாம் முன்னெடுத்தவரும் கோட்பாட்டையொத்த இவர்களது இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. இதேநேரம் அவர்கள் அபிவிருத்தி தொடர்பில் எடுத்த இந்த நிலைப்பாடு போன்று அரசியல் தீர்வு விடயத்திலும் எடுக்க வேண்டும்.

ஏனெனில் நாம் நாடாளுமன்ற ஜனநாயக அரசியலில் காலடியெடுத்து வைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து மக்களின் அவசிய தேவைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதனூடாக படிப்டியாக அரசியல் உரிமை குறித்து முன்னேற முடியும் என்று வலியுறுத்தி வந்திருந்திருக்கின்றோம்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீளமுடியாதென்று கைவிடப்படும் நிலைக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை தீவை ஜனாதிபதி ரணில் பொறுப்பெடுத்ததையும் தமிழ் தேசிய கட்சிகள் பல்வேறு கருத்துகளை நலினமாக சொல்லி விமர்சித்து வந்திருந்தனர்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்டளிட்ட பலரால் ஜனாதிபதி ரணில் தேசியப் பட்டியல் உறுப்பினராக வந்தவர் என்றும் இவர் மக்களின் ஆணையுடன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படவில்லை என்றும் இவரால் ஒன்றும் செய்துவிட முடியாதென்றும் பல்வேறு கருத்துக்களை சொல்லி விமர்சித்து தமது அரசியலை முன்னெடுத்திருந்தனர்.ஆனால் இலங்கை அரசியல் சாசனப்படி அவரது தெரிவு முறைமை சரியானதாகவே இருக்கின்றது ஆனால் இதை நன்கு தெரிந்திருந்தும் ஜனாதிபதி ரணிலின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு வேண்டும் எனவும் அதை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இந்த நிதி ஒதுக்கீட்டு விடயத்திலே ஜனாதிபதி மிக தெளிவாக ஒன்றைச் சொல்லி இருக்கின்றார்.

அதாவது நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு தன்னுடன் சேர்ந்து இணைந்து பயணிப்பவர்களுக்கு மட்டும் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியிலிருந்து ஒதுக்கீட்டை செய்து கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினகளான சிவஞானம் ஸ்ரீதரன், சித்தார்த்தன் போன்றோரும் அதேபோன்று வன்னிப் பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளிட்ட இன்னும் சிலரும் ஜனாதிபதியின் கருத்தை எற்று அவருடன் இணைந்து பயணிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது போன்ற நிலைப்பாட்டுடன் நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ளனர். என தெரிவித்துள்ளார்.