மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்!

16 0

இலங்கை தற்போது காலநிலைசார் சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.

அதிகரித்துவரும் வெப்பநிலையும், மிகையான உஷ்ணமும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கைத் தரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் நிலவரம் மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் என்பவற்றை உள்ளடக்கி வெளியிட்டுள்ள மாதாந்த மதிப்பீட்டு அறிக்கையிலேயே உலக உணவுத்திட்டம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

‘இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முகங்கொடுத்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக மீட்சியடைந்து வருகின்றது.

இந்த நெருக்கடியானது 2022 ஆம் ஆண்டில் சுமார் 62 இலட்சம் பேரை உணவுப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியது.

2023 ஒக்ரோபரில் 24 சதவீதமான குடும்பங்கள் மிதமான உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இருப்பினும் இந்த ஆண்டில் பணவீக்க வீழ்ச்சியுடன் நிலைமை ஓரளவுக்கு ஸ்திரமடைந்து வருகின்றது.

எவ்வாறெனினும், நாடளாவிய ரீதியில் 43 சதவீதமான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கான மாற்றுவழிகளையும், 42 சதவீதமான குடும்பங்கள் உணவைப் பெற மாற்றுவழிகளையும் கையாண்டுவருவதனால், இதுகுறித்த கரிசனை இன்னமும் தொடர்கின்றது.

அத்துடன், தற்போது இலங்கை காலநிலை சார்ந்த சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றது.

அதிகரித்துவரும் வெப்பநிலையும், மிகையான உஷ்ணமும் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கைத்தரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதுடன் விவசாயத்துறை மீதும் அழுத்தங்களைத் தோற்றுவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.