நினைவேந்தலுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் : ஜனாதிபதியிடம் அங்கஜன் வலியுறுத்தல்

173 0

யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு  ஜனாதிபதி  அனுராதபுரத்தில் பொது நினைவுத்தூபியை ஸ்தாபிக்காவிட்டாலும் பரவாயில்லை  வடக்கு மற்றும் கிழக்கில் தமது உறவுகளுக்கு மக்களை அஞ்சலி செழித்த விடுங்கள். மக்கள் அஞ்சலி செலுத்துவதனை தடுக்க முடியாது என ஜனாதிபதியும் கூறுகின்றார். ஆனால் அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு இயந்திரம் அஞ்சலி  நிகழ்வுகளுக்கு தடை கேட்டு  வழக்குத் தாக்கல் செய்கிறது என  பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான  அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை  (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு  ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 2024 ஆம் ஆண்டுக்கு 13 பில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் அரசியலமைப்பின்  13 ஆவது திருத்தத்தை  தீர்வாக கேட்கின்றோம். நீங்கள் இராணுவத்துக்கு 13 பில்லியனை அதிகமாக ஒதுக்குகின்றீர்கள்.

இந்த வாரம் எமது மக்களுக்கு உணர்வு பூர்வமானது. தங்களின் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவு வாரம். அதனை தடுக்க பல வழிகளிலும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால்  தடைகோரும் மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரிப்பதனை நான் வரவேற்கின்றேன். மக்கள் அஞ்சலி செலுத்துவதனை தடுக்க முடியாது என ஜனாதிபதியும் கூறுகின்றார். ஆனால் அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு இயந்திரம் அஞ்சலி  நிகழ்வுகளுக்கு தடை கேட்டு வழக்குப் போடுகின்றது.

யுத்தத்தில் இறந்தவர்களை அஞ்சலிப்பதற்காக ஜனாதிபதி பொது இடத்தில் தூபி ஒன்றை நிர்மாணிப்பதாக அறிவித்தார். அறிவிப்போடு மட்டுமே அது உள்ளது. வேறு எதனையும் காணவில்லை. அரசு அனுராதபுரத்தில் தூபி கட்ட விரும்பினாலும் முள்ளிவாய்க்காலில் அந்த தூபியை  கட்ட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நிலைப்பாடு.

நல்லிணக்கத்தை  விரும்புகின்றோம் என்றால் தூபியை கட்ட முடியாது விட்டாலும் பரவாயில்லை  மக்கள் செலுத்தும் அஞ்சலிகளை தடை செய்யாமல் இருங்கள். இதனை  ஜனாதிபதியும் உறுதி செய்ய வேண்டும். இந்த அஞ்சலிகளை வைத்து இனவாத அரசியல் நடத்தக்கூடாது. ஆனால் இங்கு நடப்பதோ வேறு அதனை வரும் நாட்களில் எல்லோரும் பார்க்கலாம்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில்   காணாமல் ஆக்கப்பட்டோருக்கு இழப்பீடு கொடுப்பதற்காக 1000 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன். ஆனால் இது அந்த மக்களுக்கான நீதி அல்ல. உயிருக்கு விலை பேசும் நாடாக இந்த நாடு அமையக்கூடாது.இழப்பீடு கொடுப்பது எவ்வாறு அரசின் கடமையோ அதுபோல் நீதியையும் வழங்குவது அரசின் கடமை  என்றார்.