கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகள், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விடிய விடிய பெய்தது. கோழிப் போர்விளையில் அதிகபட்சமாக 132 மில்லி மீட்டர் மழை பதிவானது. நாகர்கோவில், களியக்கா விளை, மார்த்தாண்டம், பேச்சிப் பாறை, கொட்டாரம், மயிலாடி, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியில் மழை நீடிப்பதால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து மிதமாக உள்ளது. மலையோர பகுதிகளில் உள்ள சாலைகளை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்ந்தது. இதனால் பேச்சிப் பாறை, மோதிரமலை, குற்றியாறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
பேச்சிப்பாறை அணையில் இருந்து 509 கனஅடி உபரி நீர் உட்பட 810 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுபோல் வள்ளியாறு, பரளி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழையாலும், பேச்சிப் பாறை, சிற்றாறில் இருந்து வெளியேறும் தண்ணீராலும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவி பகுதியில் கல்மண்டபத்தை சூழ்ந்தவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. சிறுவர் பூங்காவை மூழ்கடித்து வெள்ளம் பாய்நதால் அருவியில் குளிக்க நேற்று 4-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. தொடர் மழையால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உட்பட முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீட்டுகளுக்குள் முடங்கினர். தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. நாகர்கோவில் கோட்டாறு, வடசேரி பகுதிகளில் சாக்கடை நீர் நிரம்பி மழை நீருடன் சாலையில் பாய்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 44.15 அடியாக இருந்தது. அணைக்கு 762 கன அடி தண்ணீர் வருகிறது.
அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 509 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.41 அடியாக உள்ளது. அணைக்கு 576 கன அடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 480 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 17.09 அடியாக உயர்ந் துள்ளது. அணைக்கு 877 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 500 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறையில் 47 மி.மீ., பெருஞ்சாணியில் 46, சிற்றாறு ஒன்றில் – 67, சிற்றாறு இரண்டில் 87, பூதப்பாண்டியில் 60, களியலில் 50, கன்னிமாரில் 42, கொட்டாரத்தில் 48, குழித்துறையில் 41, மயிலாடியில் 62.4, நாகர்கோவிலில் 63.6, புத்தன் அணையில் 42.8, சுருளோடில் 58, தக்கலையில் 122, இரணியலில் 34, பாலமோரில் 22, திற்பரப்பில் 53 , கோழிப்போர்விளையில் 132, அடையாமடையில் 63, குருந் தன்கோடில் 66, ஆணைக்கிடங்கில் 95, முக்கடலில் 47 மி.மீ., மழை பெய்தது.
ரப்பர் பால்வெட்டும் தொழில், தேங்காய் வெட்டுதல் உட்பட தென்னை சார்ந்த தொழில்கள் மற்றும் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

