அரசியலமைப்பு பேரவை என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல

139 0

பொலிஸ் மா அதிபர் மற்றும் நீதிபதிகள் சிலரை நியமிக்க அரசியலமைப்பு பேரவையால் முடியாதுபோயுள்ளதாக தான் இல்லாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டாலும், அரசியலமைப்பு பேரவை என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளதாகவும், ஜனாதிபதி “கூறுவது போல் இருக்க வேண்டிய பேரவை” அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட பெயர் இரு சந்தர்ப்பங்களில் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டாலும்,இரண்டாவது நியமனம் வழங்கப்படும் போது மூன்றாவது நியமனம் நிரந்தர நியமனமாக இருக்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டு,அதன் பின்னர் ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட தற்காலிக பெயர்களை நிராகரித்ததாகவும்,இங்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அரசியலைப்பு பேரவை பொறுப்பல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி நாட்டை தவறாக வழிநடத்துவது பொருத்தமானதல்ல என்றும்,கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் சபாநாயகராக பதவி வகித்த போது இத்தகைய அவசர நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அப்போது அவசர வாக்கெடுப்பு கூட நடத்தப்பட்டதாகவும்,எனவே அந்நேரத்தில் இவ்வாறானதொன்றை மேற்கொள்ளாமல், தற்போது அரசியலமைப்பு பேரவையினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் நாட்டை முடக்கும் விடயமாக எடுத்துக்கொள்ளல் ஆகாது என்றும், அரசியலமைப்பு பேரவை என்பது பிறர் இயக்க இயங்கும் பேரவை அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்ட போதிலும்,பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் தொடர்பில் இன்றளவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தக் கூட தெரிவுக்குழுவை இந்த அரசாங்கத்தினால் நியமிக்க முடியாதுபோயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.