உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டும்

117 0

ஆட்சியாளர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் நீதிமன்ற சுயாதீனத்தை சர்வதேசத்துக்கு உறுதிப்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடையவேண்டு்ம். அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாகவும் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பொன்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமருக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதில்லை என்ற கருத்து நாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது உயர் நீதிமன்றம்  இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ் ஆகியோருக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நீண்ட காலத்துக்கு பின்னரே உயர் நீதிமன்றம் இதுபோன்றதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

இது தொடர்பில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில் எமது நீதிமன்ற சுயாதீனம் தொடர்பில் சர்வதேசத்துக்கு நல்லெண்ணம் இருக்கவில்லை. ஆனால் இந்த தீர்ப்பின் மூலம் எமது நீதிமன்ற சுயாதீன தன்மை தாெடர்பில் சர்வதேசத்துக்கு தெரிவிக்க இது சிறந்த ஆரம்பமாகும்.

ஆட்சியாளர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்காத ஒரு காலம் இருந்தது . திவிநெகும சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக, அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவந்து பதவி நீக்கினார்கள்.

இவ்வாறான முறைகேடான நடவடிக்கைகள் காரணமாகவே எமது நாடு சீரழிந்தது. அரச ஊழியர் ஒருவர் சேவையில் இருந்து விலகினால் அவருக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. ஆனால் தற்போது நாட்டின் ஜனாதிபதி தப்பிச்சென்றார்.ஆனால் அவருக்கு  வருடத்துக்கு 3கோடி கொடுப்பனவு வழங்கப்படுகிறது. சேவையில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருக்கு ஏன் 3கோடி வழங்க வேண்டும்? அரச சேவையில் இருந்து தப்பிச்செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழு தங்களுக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய செயற்படாமல், தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி வருகிறது. இந்த அரசாங்கம் தேர்தலுக்கு பயம். தேர்தலுக்கு அச்சப்படும் அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் உதவி கிடைக்கப்போவதில்லை. மார்ச் மாதம் நடத்த இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை  இன்னும் நடத்தவில்லை. அதனால் நீதிமன்றம் இது தொடர்பாக உறுதியான தீர்ப்பொன்றை வழங்க வேண்டும்.  பிரதேச சபை உறுப்பினர்கள் இல்லாததால் கிராமங்களில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளை அந்த மக்கள் யாரிடம் சொல்து என தெரியாமல் இருக்கின்றனர்.

அதனால் தேர்தலை நடத்த பணம் இல்லை என அரசாங்கத்துக்கு தெரிவிக்க முடியாது. அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ளூராட்சி  மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.