யாழில் பொலிஸாரின் தாக்குதலினால் உயிரிழந்த இளைஞன்: நீதி கோரிய சித்தார்த்தன்

172 0

யாழ். வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (21.11.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான சில கருத்துக்களைக் கூறுவதற்கு முன் வட்டுக்கோட்டை பகுதியிலே நடந்திருக்கக் கூடிய இறப்பு தொடர்பான ஒரு விடயத்தை இந்த சபையில் கூறுவதற்கு நான் விளைகின்றேன்.நாகராஜா அலெக்ஸ் என்ற 28 வயதான ஒரு இளைஞர் இந்த மாதம் எட்டாம் திகதி சித்தங்கேணி பகுதியில், வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸாரால் விளக்கமறியலில் வைத்து  சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அவரை பிரேத பரிசோதனை செய்த வைத்திய அதிகாரி அது ஒரு இயற்கை மரணமல்ல, தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் தான் அவர் இறந்துள்ளார் என்று கூறியிருக்கின்றார்.இதன் காரணமாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

சாதாரணமாக தமிழ் பகுதிகளில் இப்படியான சம்பவங்கள் நடந்துவிட்டால் இடம் மாற்றுவதும், அதை மறந்து விடுவதுமான ஒரு நிலைப்பாடே தொடர்ந்து நிலவிவருகின்றது.

இதற்கு ஒரு சரியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் ஒழிய இப்படியான சம்பவங்களை ஒருபோதும் திருத்தவும் தடுக்கவும் முடியாது.

இது மிகப் பாரதூரமான விசயம் என்பதைக் கருத்திற்கொண்டு அரசாங்கம், முக்கியமாக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

ஜனாதிபதி அவர்களும் இதில் தலையிட்டு நிச்சயமாக உடனடியான ஒரு நடவடிக்கை எடுத்து இது போன்ற விடயங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.