அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவு சீட்டு இயந்திரங்கள் அகற்றல்

166 0

பல கோரிக்கைகளை முன்வைத்து அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், தற்போது இடம்பெற்று வருவது தொழிற்சங்க நடவடிக்கையல்ல எனவும் நாசகார நடவடிக்கையே இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் நுழைவு சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அனைத்தையும் அகற்றியதன் மூலம் அரசாங்கத்தின் வருமானம் வேண்டுமென்றே இழக்கப்படுவதற்கு செயற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியின் கீழ் இவ்வாறானதொரு செயலைச் செய்வது பாரிய குற்றமாகும் எனத் தெரிவித்த அமைச்சர், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

இதேவேளை, தொழில்சார் நடவடிக்கைகளுடன் அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்தின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக அமைச்சர் பந்துல குணவர்தன, கொட்டாவை மற்றும் அதுருகிரிய நெடுஞ்சாலை இடமாறல்களில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.

தற்போது, ​​கொட்டாவை நெடுஞ்சாலை பாதையின் இடமாறலில் இராணுவ அதிகாரிகளால் நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் அத்துருகிரிய இடமாறலில் இலங்கை விமானப்படை அதிகாரிகளால் நுழைவு சீட்டு வழங்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.