ராஜபக்ஷக்களிடம் நட்டஈட்டை பெறுவதற்கு சட்ட நடவடிக்கை ; சுமந்திரன் தலைமையில் எதிரணி சட்டத்துறையினர் ஆராய்வு

28 0

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் ராஜபக்ஷ குடும்பத்தினரும், அவர்களது சகாக்களும் காரணமாக இருப்பதும் அவர்கள் அதற்கான பொறுப்பினை கூறவேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் சாதாரண மக்களுக்கான நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுப்பதற்காக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது சம்பந்தமாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம்.பி தலைமையில் எதிர்க்கட்சிகளின் சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

முன்னதாக, நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டபுள்யூ.யு.டி. லக்ஷ்மன், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, முன்னாள் ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர மத்திய வங்கியின் நிதிச் சபை ஆகிய தரப்புக்கள் ‘பொறுப்புக்கூற வேண்டும்’ என்று உயர்நீதிமன்றில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர்பில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்தே பொருளாதார நெருக்கடிகயால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களிடத்தில் இருந்து நட்ட ஈட்டைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றி ஆராயப்படுகின்றது.

இதுதொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரியிடத்தில் தெரிவிக்கையில்,

நாட்டை பொருளாதார ரீதியாக சீரழித்தமைக்காக பொறுப்புக்கூற வேண்டியவர்களாக ராஜபக்ஷக்கள் உயர் நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையானது மிகவும் முக்கியமான விடயமாகும்.

ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவர்களிடமிருந்து நட்ட ஈட்டைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குதல் சம்பந்தமாக எவ்விதமான உத்தரவுகளும் விடுக்கப்படவில்லை.

இருப்பினும், பொறுப்புக்கூறலில் இருந்து விலகியமையால், அதற்கான இழப்பீட்டை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செலுத்த வேண்டும் என்பதற்கான உயர்நீதிமன்றம் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

அந்த வழக்கின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு எனது தலைமையில் ஏனைய எதிர்க்கட்சிகளின் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் தரப்பினர் உள்ளிட்டவர்களுடன் ராஜபக்ஷக்களிடத்திலிருந்து நட்டஈட்டைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்களை அடுத்து வரும் காலத்தில் முன்னெடுப்பது பற்றிய ஆராய்ந்து வருகின்றோம்.

விசேடமாக, ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரையில் 22மில்லியன் மக்களுக்கும் நட்டஈடு வழங்குமளவிற்கு நாட்டுக்கு வெளியில் போதுமான பணம் இருக்கின்றது. அதற்கான சான்றதாரங்களும் காணப்படுகின்றன.

அதனடிப்படையில் ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே வைத்திருக்கும் பணத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.

நாட்டிற்கு வெளியே வைத்துள்ள அனைத்து பணத்தையும் மீண்டும் கொண்டு வர முடியும். அந்த பணத்தில் தான் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்க பட்ட மக்களுக்கான நிவாரணத்தினையும் வழங்க முடியும் என்பதே எமது சட்ட நடவடிக்கைக்கான முயற்சியின் நோக்கமாகவுள்ளது என்றார்.