நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமாக இருந்து நாட்டை சீரழித்து வங்குரோத்து அடையச் செய்வதற்கு காரணமாக இருக்கும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக அவ்விதமான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், தமிழ் மக்களை எதிரிகளாக காண்பித்து, நாட்டை சூறையாடிக்கொண்டிருந்த தரப்பினர் ராஜபக்ஷக்களே என்பதை உயர்நீதிமன்றமே வெளிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என்பதோடு, சிங்கள மக்கள் எதிர்காலத்திலாவது அனைத்து ராஜபக்ஷக்களையும் அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டபுள்யூ.யு.டி. லக்ஷ்மன், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, முன்னாள் ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர மத்திய வங்கியின் நிதிச் சபை ஆகிய தரப்புக்கள் ‘பொறுப்புக்கூற வேண்டும்” என்று உயர்நீதிமன்றில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர்பில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு தொடர்பில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
மாவை.சோ.சேனதிராஜா தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தினை சீரழித்தவர்கள் யார் என்பது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரவேற்கத்தக்க விடயமாகும். விசேடமாக, பெரும்பான்மை சமூகத்தினரால் தொடடுக்கப்பட்ட வழக்குகளின் மூலமாகவே அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குறித்த தீர்ப்பினை வைத்து எதிர்காலத்தில் ராஜபக்ஷக்கள் இனவாத பிரசாரங்களை மேற்கொள்ள முடியாது.
போர் முடிவடைந்ததன் பின்னர் ராஜபக்ஷக்கள் பொறுப்புக்கூறலைச் செய்யவில்லை. மாறாக நாட்டின் இனவாதத்தினை தோற்றுவித்து, இனப்பிரச்சினைக்கான தீர்வினை இழுத்தடித்து தமிழ் மக்களை ஏமாற்றினார்கள். சிங்கள மக்கள் மத்தியில் அந்தச் செயற்பாடுகளை பயன்படுத்தி வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரங்களில் இருந்தார்கள்.
அவ்விதமான போக்கானது நாட்டின் எதிர்காலத்தினையே சீர்குலைக்கப்போகின்றது என்று எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துரைத்தபோதும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. சிங்கள மக்களும் அதனைப் புரிந்து கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது சிங்கள மக்களுக்கும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் யார் காரணம் என்கிற விடயம் அப்பட்டமாக உணரக்கூடியவாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே அடுத்தகட்டமாக பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டிய ராஜபக்ஷக்கள் உள்ளிட்டவர்கள் உரிய இழப்பீடுகளை வழங்குவதற்குரிய நடவடிக்களை முன்னெடுப்பதோடு மட்டுமல்லது இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நாட்டில் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தண்டனைகள் உரிவாறு வழங்கப்பட வேண்டும் என்றார்.
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், ராஜபக்ஷக்களை கர்மவினை சூழந்துகொண்டுள்ளது. அதன் பிரதிபலிப்புக்களை அவர்கள் தற்போது அனுபவிக்கின்றார்கள். அவர்கள் போர் வெற்றியுடன் அதிகார போதையில் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் மோதலுக்கு உட்படுத்தி அதில் குளிர் காய்ந்தார்கள்.
அதுமட்டுமன்றி, மக்கள் கூட்டங்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டிருக்கையில் ராஜபக்ஷக்களும், அவரது சகாக்களும் நாட்டின் வளங்களை சூறையாடினார்கள். ஊழல், மோசடிகளை பெருமளவில் மேற்கொண்டார்கள். இதனை அவ்வப்போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், ஊடவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் வெளிப்படுத்திய தருணங்களில் அவர்களை படுகொலை செய்தார்கள்.
இந்த நிலையில் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற முதுமொழிக்கு அமைவாக, இப்போது நாட்டின் மீயுர் பெறுமானம் மிக்க உயர்நீதிமன்றமே ராஜபக்ஷக்கள் நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு காரணமானவர்கள் என்பதை அடையாளப்படுத்திவிட்டது.
ஆகவே, இனமோதலுக்கு வித்திட்டவர்களும், நாட்டை வங்குரோத்துக்கு உள்ளாக்கியவர்களும் ஒரேதரப்பினராக இருக்கையில் அவர்களை அரசியலில் இருந்து ஒட்டுமொத்தமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சிங்கள மக்களே எடுக்க வேண்டும். அதுமட்மன்றி, இவ்வாறு இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தரப்பினர் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும்.
மேலும், மனுதாரர்கள் தங்களுடைய மனுக்களில் தண்டை மற்றும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளுதல் சம்பந்தமான கோரிக்கைகளை வழங்கியிருக்கவில்லை. ஆகவே அதுசம்பந்தமாக அடுத்தகட்டமாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து விரைவில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், எம்மைப்பொறுத்தவரையில், முதற்தடவையாக நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கிய நபர்களை அடையாளப்படுத்தி உயர் நீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பொறுப்புக்கூற வேண்டியவர்களை பொதுமக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியுள்ளது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாடானது தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.
ஆகவே இந்த நிலைமை மீண்டும் மீண்டும் நிகழாதிருக்க வேண்டுமாக இருந்தால், துறைசார்ந்த அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் இவ்வாறான பொருளாதாரக் குற்றங்கள் மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்படும். அவ்வாறில்லது விட்டால் பொறுப்புக்கூறல் செயற்பாடு ஒருபோதும் முன்னெடுக்கப்பட மாட்டாது, பாதிக்கப்பட்ட மக்கள் எவருக்கும் எவ்விதமான முன்னேற்றகரமான நன்மைகளும் ஏற்படப்போவதில்லை என்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், உயர்நீதிமன்றம் நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்கு காரணமானவர்களை அடையாளப்படுத்தும் வகையில் தீர்ப்பளித்துள்ளது. நீதித்துறையில் வரலாற்றில் இதுவொரு முக்கியமான விடயம். ஆனால் அவ்வாறு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எந்தவிதமான தீர்ப்புக்களும் வழங்கப்பவில்லை.
அதேநேரம், குறித்த நபர்கள் பில்லியன் கணக்கில் வெளிநாடுகளில் முதலீடுகளை செய்துள்ளார்கள், சேமிப்பில் பணத்தை வைத்துள்ளார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதற்கான பொறிமுறைகளையும் உயர் நீதிமன்றம் பரிந்;துரைக்கவில்லை.
இதேநேரம், பொறுப்புக்கூறவேண்டியவர்கள் யார் என்று பார்க்கின்றபோது, ராஜபக்ஷக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களில் ஒருசிலர் வெளிநாட்டு குடியுரிமைகளைக் கொண்டவர்கள் அவர்கள் மீது இந்த நாட்டின் குடியுரிமையை நீக்கினாலும் அவர்கள் பிறிதொரு நாட்டில் வாழ்வதற்கான உரிமைகள் உள்ளன. அதேநேரம் அவர்களால் கொண்டு செல்லப்பட்ட நிதிகள் கூட மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவரப்படாது.
ஆகவே நாட்டு பொருளாதார ரீதியாக மோசமடைந்துள்ள நிலையில் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேநேரம், அடுத்து வரும் காலப்பகுதியில் வெளிநாடுகளில் கொண்டு சேர்த்துள்ள நிதியை மீண்டும் உள்நாட்டுக்கு கொண்டுவருவதற்கான பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
அதேநேரம், பொறுப்புக்கூறல் தொடர்பில் எதிர்மறையான மனோநிலை உடையவர்களிடத்தில் அதனை எதிர்பார்க்க முடியாது. ஆகவே அவர்களை உரிய நீதிப்பொறிமுறை ஊடாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகள் ஊடாகவே இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.