சம்பந்தனும் தமிழரசுக் கட்சி எம்.பிக்களின் பதவி விலகல்களும்

166 0

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனை (90 வயது) பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளதை சிலர் விமர்சிக்கின்றனர்.

2002 செப்டம்பர் தமிழரசுக் கட்சியின் குழு சம்பந்தனை பதவி விலகுமாறு கோரியபோது திருகோணமலை மக்கள் வயதையும் பாராது என்னை தெரிவுசெய்தனர்; முடியாது என மறுத்திருந்தார்.

முதுமையால் 288 சபை அமர்வுகளில் 39 நாட்களே சமுகமளித்து வரவு 13.6 வீதமான நிலையில், சம்பளம், எரிபொருள், தொலைபேசி போக்குவரத்துச் செலவுகளுக்கு 4 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இவை மக்களின் வரிப்பணம் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, வழங்கப்பட்ட அரச இல்லத்தில் அவர் தற்போது வசிக்கிறார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் இவர் கலந்துகொள்ள முடியாத நிலைமை.

2015 சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன் பங்குபற்றியதை கண்டித்த தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மத்தியகுழுவை கூட்டி நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.நல்லாட்சியின் மீதுள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையால் தான்  கலந்துகொண்டதாக சம்பந்தன் கூறியிருந்தார்.

1956 தனிச்சிங்கள சட்டத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சி சுதந்திரதினத்தை கரிநாளாக நினைவுகூருகின்றது.

1957 சுதந்திர தினம் திருகோணமலையில் கறுப்புக்கொடி ஏற்றிய தமிழ் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராக இருந்து அரசுக்கு ஆதரவளித்தும் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தராதவர் உடன் பதவி விலகவேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 2018 வவுனியா- பாவற்குளத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

2012 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐ.தே.க,தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மே தினக்கூட்டத்தில் சம்பந்தனும் கூட்டமைப்பினரும் தேசியக்கொடியை (சிங்கக்கொடி) கையில் பிடித்தபோதும் பலரும் கண்டித்தனர். லண்டனில் தமிழ் அமைப்பு அவரது கொடும்பாவியை எரித்தது.

1951 மார்ச் 1 தேசியக்கொடி சட்டமூலத்தை எதிர்த்த செல்வநாயகம் 10 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்த ஒரு தனி இனத்தின்  சிங்கக்கொடி பல இனங்களின் தேசியக்கொடியாக்கப்படுவதை ஏற்கமுடியாது  எனக் கூறினார்.

சம்பந்தர் பதவி விலகக்கூடாது என சிலர் அவருக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்டுள்ளனர். செல்வநாயகம் கட்சி தலைமையை இராசமாணிக்கம், அமிர்தலிங்கம், இராசதுரை போன்றவர்களிடம்  ஒப்படைத்து கட்சியை வழிநடத்தினார்.

தமிழரசு கட்சிக் கொள்கைக்கு மாறாக செயற்பட்ட அக்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து முன்னர் நீக்கப்பட்ட சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சி.சுந்தரலிங்கமும் தமிழரசுக்கட்சி தலைவர் செல்வநாயகமும்  எம்.பி  பதவிகளை ராஜினாமா செய்து மீண்டும் இடைத் தேர்தல்களில் தெரிவானார்கள்.

1951 தேசியக்கொடி சட்டமூலத்தை எதிர்த்து சுந்தரலிங்கம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தததால் அவரது வவுனியா தொகுதிக்கான இடைத்தேர்தலில் (சுயேட்சை) மீண்டும் தெரிவானார்.

1955 ஆகஸ்ட் சிங்களத்தை அரச கரும மொழியாக்கும் யோசனையை எதிர்த்து 6 மாதங்களாக சபைக்கு வராது பதவியை இழந்தார். அதனால் 1956 ஏப்ரல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார்.

செல்வநாயகம் 1972 ஒக்டோபர் 2 சுதந்திரக்கட்சி அரசின் அரசியலமைப்பை எதிர்த்து எம்.பி பதவியை ராஜினாமா செய்து காங்கேசன்துறை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மீண்டும் தெரிவானார்.

1961 பெப்ரவரி ஏப்ரல் வட கிழக்கு கச்சேரிகளின் முன்பான சத்தியாக்கிர நிதிக்கு சேகரிக்கப்பட்ட பல லட்சம் ரூபாவை செல்வநாயகம் மோசடி செய்ததாக கணக்கு விபரம் கேட்ட கிளிநொச்சி தொகுதி எம்.பியான ஏ.சிவசுந்தரம் தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

1968 தேசிய அடையாள அட்டை மதோதாவுக்கு தமிழரசுக்கட்சி எம்.பிக்கள் ஆதரித்து வாக்களித்தபோது ஊர்காவற்றுறை தொகுதி உறுப்பினர் வ.நவரத்தினம் எதிராக வாக்களித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தே.அ.அட்டையால் எதிர்காலம்  தமிழர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும்  எனக்கூறி நவரத்தினம் எதிர்த்தார். அடையாள அட்டையால் பல  தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். காணாமல் போனார்கள்.

1970 தேர்தலில் யாழ்ப்பாணம் தொகுதியில் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சீ.எக்ஸ்.மாட்டீன் 1971 ஜூலை சுதந்திரக்கட்சியின் அரசியலமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

1977 தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் 1 வது எம்.பியாக தெரிவான செல்லையா இராசதுரை 1978 நவம்பர் சூறாவளி அனர்த்தங்களை பார்வையிட வந்த பிரதமர் அமைச்சர்களை வரவேற்றதால் கட்சியின்  கொள்கைக்கு மாறாக நடந்துகொண்டதாக நீக்கப்பட்டார்.

இன்று தமிழரசுக் கட்சியினர் அமைச்சர்களை வரவேற்கின்றனர்.

தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரான இவர் 1956 முதல் 1977 வரை மட்டக்களப்பு தொகுதியில் தெரிவானார்.இத்தேர்தலில் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் காசி ஆனந்தனும்,தமிழரசின் வீட்டு சின்னத்தில் இராசதுரையும் போட்டியிட்டனர்.

(சம்பந்தன் விடுதலை) 1961 ஏப்ரல் அவசரகால சட்டத்தின் கீழ் பனாகொட இராணுவ முகாமில் தமிழரசு எம்.பிக்கள் தொண்டர்களுடன் தடுப்புக்காவலில் இருந்த இளம் சட்டத்தரணி இரா.சம்பந்தனும் (28 வயது) தனது சட்டத்தொழிலை காட்டி விடுதலையானார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட கல்முனை தொகுதி தமிழரசு கட்சி எம்.பியான எம்.சி அஹமட் 3 மாதங்களுக்கு மேல் சபைக்கு செல்லாவிடில் தனது ஆசனம் காலியாகும் என்ற சட்டவிதிகளால் அக்கட்சியை விட்டு விலகி சுதந்திரக்கட்சியில் இணைந்து விடுதலையானார்.

கோப்பாய் எம்.பி-மு.பாலசுந்தரமும் 6 மாதங்கள் சபைக்கு சமூகமளிக்காவிடில் தனது ஆசனம் பறிபோகும் என்பதால்  தமிழரசு எம்.பிக்களுக்கு தெரியாமல் பாராளுமன்ற செயலாளருக்கு  விடுமுறை கோரி கடிதம் எழுதினார்.

இதனைக்கண்டித்த ஏனைய தமிழரசு எம்.பிக்களும் தமது பதவிகள் காலியாகி  இடைத்தேர்தல் நடைபெற்றால் மக்களின் ஆதரவு கிடைக்குமா?

தேர்தல் செலவுகள்! என சிந்தித்து  செயலாளருக்கு விடுமுறை கடிதம் எழுதினார்கள்.

சத்தியாக்கிரகத்தின்போது “சிறைச்சாலை பூஞ்சோலை! தூக்கு மேடை பஞ்சு மெத்தை! என்று வீர வசனம் பேசியவர்கள் தமது எம்.பி. பதவியை காப்பாற்றிக்கொண்டனர்.

பாரிஸ்டரான மு.பாலசுந்தரம் 1961 ஏப்ரல் 14 தமிழரசு முத்திரை வெளியிடுவதையும் எதிர்த்து தமிழரசுக்கட்சியுடன் முரண்பட்டிருந்தார். அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்திருந்தார்.பாலசுந்தரம் போராட்டத்தில் கலந்துகொள்ளாது ஒதுங்கிக்கொள்ளலாம் என கட்சியின் மத்திய குழு தீர்மானித்தது.

1965 தேர்தல் அவரை கட்சி  நீக்கியதும் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தமிழத் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும் இடம்பெற்ற தேர்தல்களில் தேசிய பட்டியல் எம்.பி.பதவிக்காக சிலர் நடந்துகொண்ட முறைகள் மறக்கமுடியாது.

கடந்த தேர்தல் முடிவு யாழ்.மத்திய கல்லூரியில் அறிவிக்கப்பட்டதும் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் ஒரு வேட்பாளர் தெரிவானதும் சண்டையிட்டு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ம.ரூபன்