சிகிரியாவை பார்க்கச் சென்று மீண்டும் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரின் பணப்பையை திருடிய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களின் சாமர்த்தியமான செயற்பாட்டால் குறித்த சந்தேக நபர்களை குறுகிய காலப்பகுதிக்குள் விரைவாக கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) சிகிரியாவுக்குச் சென்று மீண்டும் விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த 22 வயதான துருக்கிய வெளிநாட்டுப் பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கிவிட்டு அவரது பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதிவேகமாக பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள்களை வீதியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் பார்த்துள்ளனர்.மோட்டார் சைக்கிள் தொடர்பில் சந்தேகம் அடைந்த சிறுவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை நினைவில் கொண்டு பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சிறிது நேரத்திற்கு முன் இரண்டு சந்தேக நபர்கள் வெளிநாட்டு யுவதியின் பணப்பையை கொள்ளையடித்துவிட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
அதன்படி இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர்கள் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சந்தேக நபர்களை 45 நிமிடங்களுக்குள் கைது செய்து சுற்றுலா பயணியிடம் இருந்து திருடப்பட்ட 225 அமெரிக்க டொலர்கள் மற்றும் 20,000 இலங்கை ரூபாவையும் மீட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறுவர்களின் சாமர்த்தியமான செயற்பாட்டால் சந்தேக நபர்கள் இலகுவாகவும் விரைவாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளைச் சம்பவத்தில் காயமடைந்த துருக்கி சுற்றுலாப்பயணி சிகிரியா பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

