கிளிநொச்சியில் நாளை மாபெரும் நிலமீட்பு பேரணி

230 0
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களங்களில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றுமாறு கோரி மாவட்ட விவசாயிகளினால் நாளைய தினம் வட்டக்கச்சிப் பண்ணையில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய சம்மேளணச் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார்.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்மேளணச் செயலாளர்.
மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விழங்க வேண்டிய அரச திணைக்களங்களை அபகரித்துள்ள இராணுவம் அவற்றினை விடுவித்து விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உதவ முன்வர வேண்டும் என மாவட்ட விவசாயிகள் ஒன்றினைந்து முன்னெடுக்கும் குறித்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு பட்டதான 4 முக்கிய அரச திணைக்களங களின் அலுவலகம் மற்றும் இதர காணிகள் என முக்கிய இடங்கள் அனைத்தையும்  இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளனர். அவ்வாறு ஆக்கிரமித்துள்ள இராணுவம் யுத்தம் முடிந்து இன்று   ஆண்டுகள் கடந்த போதும் அவற்றினை விடுவிக்கும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதனால் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
இதனால்  கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள 415 ஏக்கர் விவசாயப் பண்ணை ,  இரணைமடுக் குளத்தின் அருகில் உள்ள நீர்ப்பாசணத் திணைக்களத்தின் கண்காணிப்பாளர் அலுவலகம் , ஏ9 வீதியில் உள்ள விவசாயத் திணைக்களத்தின் சேவைக்கால பயிற்சி நிலையம் அதேபோல்  காக்கா கடைச் சந்திக்கருகில் உள்ள நீர்ப்பாசணத் திணைக்களத்தின் அலுவலக கட்டிடம் ஆகியவற்றினை விடுவிக்குமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் திங்கட் கிழமை காலை 9 மணிக்கு வட்டக்கச்சி பண்ணையின் முன்னாள் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் 10 மணிக்கு அங்கிருந்து நகர்ந்து 11 மணியளவில் மாவட்டச் செயலகத்தினை சென்றடையும் . அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரச அதிபரிடம் கையளுக்கப்படும் இதன் பிரதி மாகாண முதலமைச்சருக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு இவ்வாறு இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பான தகவல் பொலிசாருக்கும் வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. என்றார்.-