மின்சார சபையின் முன்மொழிவுகளில் பரஸ்பர வேறுபாடு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

243 0

மின்கட்டண அதிகரிப்புக்காக கேள்வி அதிகரிப்பு, நீர்மின்னுற்பத்தி பற்றாக்குறை, நிலக்கரி மின்னுற்பத்தி ஆகிய கட்டமைப்புக்கள் தொடர்பில் மின்சார சபை முன்மொழிந்துள்ள தரப்படுத்தலுக்கும், ஆணைக்குழு மேற்கொண்ட தரப்படுத்தலுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே தற்போதைய புதிய தரப்படுத்தலுக்கு அமைய ஏற்றுக்கொள்ள கூடிய சரியான முன்மொழிவுகளை 18  திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிலவிய வரட்சியான காலநிலையால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டது.இதனால் மின்சார சபை சுமார் 30 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டது.எதிர்பார்க்கப்பட்ட நீர்மின்னுற்பத்தி சாத்தியமற்றதாக காணப்படுவதால் மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை கடந்த மாதம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்தது.

ஒரு மின்னலகுக்கான கட்டணத்தை 8 ரூபாவில் அதிகரிக்க வேண்டும் அல்லது ஒட்டுமொத்த மின்னலகுக்கான கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை யோசனை முன்வைத்தது.2024 ஆம் ஆண்டு; ஜனவரி மாதத்துக்கான மின்கட்டண திருத்தத்தை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியது.

மின்கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த மூன்று முன்மொழிவுகளை பரிசீலனை செய்ய ஆணைக்குழு தரவுகளில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதை சுட்டிக்காட்டி தற்போதைய புதிய தரப்படுத்தல்களுக்கு அமைய சரியான முன்மொழிவுகளை நாளைய தினத்துக்குள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

கேள்வி அதிகரிப்பு

2023.09 மாதம் இறுதி பகுதியில்  மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவில் ஒரூ நாளைக்கு 44.70 ஜிகாவாட் மின்சாரத்துக்கான கேள்வி காணப்படுவதாகவும்,அத்துடன் ஒக்டோபர் மாதம் முதல் டிசெம்பர் மாதமளவிலான காலப்பகுதியில் ஒரு நாளைக்கு 42.83 ஜிகாவாட்  மின்சாரத்துக்கான கேள்வி காணப்படுவதாகவும் மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொண்ட தரப்படுத்தலுக்கு அமைய செப்டெம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கான மின்சாரத்துக்கான கேள்வி 41.01 ஜிகாவாட் ஆகவும்,ஒக்டோபர் மாதத்துக்கான கேள்வி 41.30 ஜிகாவாட் ஆகவும் காணப்படுகிறது.

மின்சார பாவனைக்கான கேள்வி தொடர்பில் மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுக்கும்,இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தரப்படுத்தலுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீர் மின்னுற்பத்தி

செப்டெம்பர் மாதத்துக்கான நீர்மின்னுற்பத்தி பற்றாக்குறை 503 ஜிகாவாட் ஆகவும் ஒக்N;டாபர் மாதம் முதல் நவம்பர் மாதம் நீர்மின்னுற்பத்தி பற்றாக்குறை 635 ஜிகாவாட் ஆக காணப்படும் என மின்சார சபை முன்மொழிந்துள்ளது.ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தரப்படுத்தலுக்கு அமைய ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நீர்மின்னுற்பத்தி பற்றாக்குறை 314 ஜிகாவாட் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரி மின்னுற்பத்தி

நிலக்கரி பாவனை ஊடாக மின்னுற்பத்தி தொடர்பில் மின்சார சபை 2023.05.15 ஆம் திகதி சமர்ப்பித்த முன்மொழிவில் ஒக்டோபர் -டிசெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில்  நிலக்கரியுடனான மின்னுற்பத்தி 1,444 ஜிகாவாட் ஆக காணப்படும் என குறிப்பிட்பட்டது.

அதனை தொடர்ந்து 2023.09.04 ஆம் திகதி சமர்ப்பித்த முன்மொழிவில் குறித்த ஒக்டோபர்- டிசெம்பர் வரையான காலப்பகுதியில் நிலக்கரியுடனான மின்னுற்பத்தி 1338 ஜிகாவாட் ஆக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.நிலக்கரியுடனான மின்னுற்பத்தியின் வீழ்ச்சியை காட்டிலும் அதற்கான கேள்வி உயர்வடைந்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.

2023.05.15 ஆம் திகதி மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவில் ஒரு கிலோகிராம் நிலக்கரியின் விலை 68.6 ரூபா என்று குறிப்பிடப்பட்டது.2023.09.04 ஆம் திகதி சமர்ப்பித்த முன்மொழிவில் ஒருகிலோகிராம் நிலக்கரியின் விலை 52.6 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே நிலக்கரியின் விலை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஏற்க முடியாது.

மின்கட்டண திருத்தத்துக்காக மின்சார சபை  கேள்வி அதிகரிப்பு,நீர்மின்னுற்பத்தி பற்றாக்குறை மற்றும் நிலக்கரி மின்னுற்பத்தி என்ற கட்டமைப்புக்கள் தொடர்பில் முன்வைத்த முன்மொழிவுகளுக்கும்,பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொண்ட தரப்படுத்தலுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.ஆகவே தற்போதை புதிய தரப்படுத்தலுக்கு அமைய ஏற்றுக்கொள்ள கூடிய சரியான தரப்படுத்தலை நாளை தினத்துக்குள் சமர்ப்பிக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரச சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின்கட்டண திருத்த யோசனையை  பரிசீலனை செய்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையின் ஜூலை,ஆகஸ்ட்,செப்டெம்பர் மாத காலப்பகுதிகளின் வரவு மற்றும் செலவு தொடர்பான தகவல்களை கோரியிருந்தது.

மின்சார சபை கடந்த ஜூலை மாதம் 55,169 மில்லியன் ரூபா,ஆகஸ்ட் மாதம் 53,193 மில்லியன் ரூபா,செப்டெம்பர் மாதம் 50,590 மில்லியன் ரூபா என மாத வருமானம் தொடர்பான தரவுகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்ததுள்ளமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.