பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டிணைவில் இணைவதன் மூலம் இலங்கையால் பரந்துபட்ட பொருளாதார சந்தைக்குள் பிரவேசிக்க முடியும்

279 0

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டிணைவில் இணைவதன் மூலம் இலங்கையால் மிகப்பெரும் பொருளாதார சந்தைக்குள் பிரவேசிக்க முடியும் எனவும், இதனூடாக சீனாவுடன் மாத்திரமன்றி, ஏனைய பல நாடுகளுடனான பொருளாதாரத் தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீன அரச தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் ஜனாதிபதி ரணில் மேலும் கூறியிருப்பதாவது:

கேள்வி – நீங்கள் குறித்த ஒரு தரப்பை ஆதரிப்பதற்கு எதிரானவராக இருக்கின்றீர்கள். அதேவேளை குறிப்பாக பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டிணைவில் இணைவதற்கும், பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளீர்கள். பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பில் இலங்கையின் வகிபாகம் எவ்வாறானதாக இருக்கவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில் : நாம் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இணைவதன் மூலம் உலகின் மிகப்பெரும் பொருளாதார சந்தைக்குள் பிரவேசிக்கமுடியும். தெற்காசியாவில் வர்த்தக வலயமொன்று உருவாகும் என நாம் முன்னர் எதிர்பார்த்தோம். இருப்பினும், தெற்காசியாவில் வர்த்தக வலயம் உருவாகாது. எனவே, பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டிணைவில் இணைந்து, அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்பை பேண வேண்டும்.

சீனாவுடன் மாத்திரமன்றி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடனும் தொடர்பை பேணவேண்டும்.

இலங்கையின் பௌத்த மதம்தான் தாய்லாந்து, மியன்மார், லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளில் இருக்கிறது. அதேபோன்று சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடனான எமது தொடர்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்கும் அம்மட்டத்துக்கு செல்வதற்கும் நாம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதன் மூலம் உலகின் அனைத்து பாகங்களையும் போட்டித்தன்மையுடன் எட்டுவதற்கு எம்மால் முடியும். அதனூடாக அனைத்து பிராந்தியங்களிலும் எமக்கான சந்தைகளை உருவாக்கிக்கொள்வதற்கும், முதலீடுகளை உள்ளீர்த்துக்கொள்வதற்கும் முடியும்.

கேள்வி – சில மேற்குலக நாடுகள் பொருளாதாரம் சார்ந்த வற்புறுத்தல்களை மேற்கொள்வதாகவும், நலிவுற்ற பொருளாதார நிலைவரத்தை ஆயுதமாக பயன்படுத்துவதானது பிராந்திய பொருளாதார மேம்பாட்டை பாதிக்கும் எனவும் நீங்கள் அண்மையில் கூறியிருந்தீர்கள். அவ்வாறான ‘பொருளாதார வற்புறுத்தலால்’ இலங்கை பாதிக்கப்பட்டிருக்கிறதா?

பதில் : இலங்கையின் வர்த்தகக் கொள்கையானது கடந்த 20 – 25 வருடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஏனைய நாடுகளுடன் எமது வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்வதில் காணப்பட்ட பெருமளவான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் மற்றும் பணத்தைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அது தெற்காசியாவுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்ததுடன், அதன் மூலம் அபிவிருத்தி ஏற்பட்டது.

எனவே இப்போது இம்முறைமையை நிறுத்தவேண்டும் என்று கூறினால், அத்தீர்மானத்தை நாம் அனைவரும் மேற்கொள்ளவேண்டும். மாறாக, இதனை நிறுத்துமாறு மேற்குலகின் ஒருசில நாடுகளால் மாத்திரம் கூறமுடியாது.

அமெரிக்கா, ஐரோப்பாவிலும் கூட அதற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது உலக வர்த்தக அமைப்பினாலேயே தீர்மானிக்கப்பட்டது. அதில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்வதாக இருந்தால் நாம் அனைவரும் கலந்துரையாடித் தீர்மானிக்க வேண்டும் என்றார்.