கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களுக்கு தமிழ்ப்பற்றாளர் மதிப்பளிப்பு த.வி.பு. -அனைத்துலகச் தொடர்பகம்.

209 0

12.10.2023

கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களுக்கு
“தமிழ்ப்பற்றாளர்” மதிப்பளிப்பு

யேர்மனி டில்லிங்கன் தமிழாலய நிர்வாகியான கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள், 09.10.2023 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி யேர்மனி வாழ் தமிழ் மக்களையும் கல்விசார் குமுகாயத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தாய்மொழிமீதும் கொண்ட பற்றினால், 1991 ஆம் ஆண்டு சார்லுயிஸ் தமிழாலயம் தொடங்கப்பட்டபோது அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றதோடு அதற்கான நிதிப்பங்களிப்பினையும் செயய்தவராவார். எமது எதிர்காலச் சந்ததியினர் தமிழ்மொழியினைக் கற்கவேண்டுமென்பதில் மிக ஆர்வம் கொண்டு
செயற்பட்டதால் 2003ஆம் ஆண்டு பெற்றோர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார். காலத்தின் தேவைகருதி 2004ஆம் ஆண்டு முதல் டில்லிங்கன் தமிழாலய நிர்வாகியாகப் பொறுப்பேற்றுத் தன் பணியைச் சிறப்பாக ஆற்றியவராவார். அத்துடன் இவரின் 15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான பட்டயத்தை, யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் வழங்கி மதிப்பளித்திருந்தது.

யேர்மனி தமிழாலயத்தால் நடாத்தப்படும் விழாக்கள், போட்டிகள், தேர்வுகள் ஆகியவற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றியிருந்தார். சார்லுயிஸ், டில்லிங்கன் ஆகிய பகுதிகளில் வாழும் எமது மாணவச்செல்வங்கள் தாய்மொழியாகிய தமிழைக் கற்பதற்கு பல்வேறு வழிகளில் துணையாக நின்றதோடு யேர்மன் கிளையால் தமிழீழ விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்டசெயற்பாடுகளுக்கும் உறுதுணையாக நின்றவராவார்.

புலம்பெயர்வாழ்விலுள்ள பல சவால்களுக்கு மத்தியிலும் தமிழீழத்தையும் தாய்மொழியையும் தன் நெஞ்சத்தில் சுமந்து, தமிழ்மொழிக்காக மிகவும் அர்ப்பணிப்பு மிக்க வாழ்வினை வாழ்ந்த இவரை நாம் இழந்து நிற்கின்றோம். இவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், யேர்மனி தமிழாலய குமுகாயத்தினரது துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன்,
கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் நீண்டகாலத் தாய்மொழிப்பணிக்காக அவரை “தமிழ்ப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்