தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2023-மாவீரர் பணிமனை- யேர்மனி.

364 0

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2023

தலைவரின் சிந்தனையிலிருந்து……

மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்றவர்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்..

10.10.2023

அன்பான யேர்மனியவாழ் மற்றும் உலகவாழ் ஈழத்தமிழ் உறவுகளுக்கு! வணக்கம்.

மக்கள் மனச்சிதைவுகளை உண்டுபண்ணும் தீய சக்திகளின் செயல்களை இனம்கண்டு புறம்தள்ளி, மாவீரச்செல்வங்களை
ஒருசேர நினைவேந்தத் தயாராகுவோம்.

தமிழ்த்தேசிய இனவிடுதலைக்கான போராட்டத்தின் மிகப்பெரிய வரலாற்று நாயகர்களாக, மகத்தான சாதனைகளை நிகழ்த்தி தமது உன்னத உயிரீந்து மாவீர்களாக மகுடம் தரித்து, எங்கள் இதயமெல்லாம் நிறைந்து வாழும் காவல்த்தெய்வங்களான மாவீரச் செல்வங்களை ஒருசேர நினைவிருத்தி உணர்வுபூர்வமாக
நினைவேந்த ஒட்டுமொத்த தமிழினமும் தயாராகி கார்த்திகையை நெருங்கிவரும் இவ்வேளையில், மக்களின் இயல்பு மனோநிலையினைச் சிதைத்து, அவர்களை அச்சுறுத்தி குழப்ப நிலைகளை உருவாக்குவதற்கு தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சிறீலங்காப் பேரினவாத அரச இயந்திரங்களாக செயற்பட்டுவரும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமையை உணர முடிகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆயுத வழிமுறைகள் 2009ஆம் ஆண்டு அமைதிநிலைக்கு சென்றதன் பின்னர், அதைத்தொடர்ந்து வரும் ஒவ்வொரு ஆண்டிலும் தமிழீழ தேசிய மாவீர்களுக்கான நினைவேந்தலை அண்மிக்கும் நாட்களை இலக்குவைத்து அதனை நீர்த்துப்போகச் செய்து, முற்றுமுழுதாக நிறுத்தி விடுவதற்காக, தீய சக்திகள் கையிலெடுக்கும் ஒவ்வொரு வடிவங்களையும் மாவீரர்களின் வல்லமையோடு கடந்தே தமிழினம் பயணிக்கின்றது.

தாயகத்திலே சிறீலங்கா இராணுவத்தினரும், சிறீலங்காப் பொலிசாரும், புலனாய்வாளர்களும், காடையர்களும், பௌத்த துறவிகளுமாக தம்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுத்தி, தேசியச் செயற்பாட்டாளர்கள் மீதும், மக்கள் மீதும் தாக்குதல்களை நடாத்தி அச்சமூட்டுவதோடு, தமிழ் மக்களது வாழ்விடங்களையும், வளங்களையும் சுரண்டி, மத அடையாளங்களை தமிழர் நிலமெங்கும் புகுத்தி, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வழங்காது இருட்டடிப்புச் செய்து, மக்களை அவர்களுடைய இயல்பு வாழ்விலிருந்து வேறுபடுத்தி மன நெருடல்களுக்கு இட்டுச் செல்வதன் மூலமாக தொடர்ச்சியாக துன்புறுத்தி வருகின்றனர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்கள் மத்தியிலே தற்போது அளவுக்கு அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் அதிலும் குறிப்பாக தேசிய அடையாளச் சின்னங்களையும், விடுதலைப் புலிகளின் பல்வேறு துறைசார்ந்த கடிதத் தலைப்புக்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக வெளிவரும் பிரசுரங்களின் மூலமாக ஏற்படும் முன்னுக்குப்பின் முரணான கருத்துருவாக்கங்களும், அவை எமது சமூகம் நோக்கி உண்மைத் தன்மை போன்று பரப்பப்படுவதும், பல்வேறு குரல்ப் பதிவுகளை நிதானமின்றியும், நேர்மையின்றியும் வெளிப்படுத்தி அவைபற்றிய அலசல்களை மக்கள் மத்தியிலே ஏற்படுத்தி, திட்டமிடப்பட்ட குழப்ப நிலைகளை உருவாக்கி வருகின்றனர்.

அன்பான மக்களே!

இதன்பால் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நாம் விழிப்புடையவர்களாக இருப்போம். தீய சக்திகளின் திட்டமிடலுக்குள் சிக்குண்டு மனச்சிதைவுக்கு இடம்கொடாது, மாவீரர்களின் துணைகொண்டு, திடமாகவும் உறுதியாகவும் பயணிப்போம். மாவீர்கள் தரும் வல்லமை கொண்ட மக்களாக தேசப்பணி தொடர்வோம். அந்த மாவீரர்களின் நினைவேந்தலுக்காக தெளிந்த மனதோடு உணர்பூர்வமாக தயாராகுவோமென உறுதியெடுப்போம்.
நன்றி,

மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.