இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது

280 0

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் தலைமையக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல், மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச மரணப்படை ஒன்றை இயக்கியதாகவும், மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் அது செயற்பட்டதாகவும், சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்படவுள்ளதாகவும், கோத்தபாய ராஜபக்ச மற்றும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தற்போது பட்டலந்தவில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.