மறுசீரமைப்பு செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மந்தப்படுத்தவில்லை – ஹர்ச டி சில்வா

239 0
மறுசீரமைப்பு செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மந்தப்படுத்தவில்லை என்று பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நேற்று இலங்கை சார்பில் அறிக்கையை முன்வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுலாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
அரசாங்கத்தினால் உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக மறுசீரமைப்பு செயற்பாடுகளை வெற்றிகரமானதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் கட்டமைப்புடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைத்து செயற்படும்.
கால அவகாசத்தின் ஊடாக ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையகத்திற்கு முன்னாள் நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதில், ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோகித்த அபேகுணவர்தன, பந்துலகுணவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நாட்டை பிரிக்காமல் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்த இராணுவத்தை  காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டுக்கு எதிராகவே தாங்கள் ஒன்றிணைந்திருப்பதாக குறிப்பிட்டார்.