சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ;மேலும் பல உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்

256 0
பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பண்டி என்று அழைக்கப்படும் குருப்புகே சத்துரங்க புஷ்பமார என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அவர் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகத்திற்குரியவராக கருதப்படும் அவர் நேற்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவர் செல்லக்கதிர்காமம் பகுதியில் தலைமறைவாகி இருந்தநிலையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறை பேருந்து தாக்குதல் தொடர்பில் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை விசேட பிரிவின் அதிகாரியொருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இதன்படி குறித்த சிறைபேருந்து தாக்குதலில் பத்து பேர் பங்குகொண்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு அங்கொட லொக்கா என்பவரே தலைமை தாங்கியிருப்பதாகவும், அவர் காவல்துறை அதிகாரியின் சீருடைக்கு ஒத்தவாறான உடை அணிந்து வந்திருந்ததாகவும் ஏனைய ஒன்பது பேரும் சிறைச்சாலை அதிகாரிகளின் உடையில் வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு தெற்கு பாதாள குழுத் தலைவரான மதுஷ் என்பவரின் உதவியாளரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் தலைமறைவாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சமயங் உள்ளிட்ட சிறைக் கைதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லும் வழியில் சிறைச்சாலை பேருந்தின் மீது கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது சமயங் உள்ளிட்ட ஐந்து கைதிகளும், இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.