தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்

65 0

நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

ஆகவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என பொதுஜன பெரமுனவின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை 2019 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்கள்.எமது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எடுத்த தவறான தீர்மானங்களினால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டதால் அரசியல் ரீதியில் நெருக்கடிகள் தோற்றம் பெற்று பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.பொருளாதார பாதிப்பை கொண்டு ஒரு தரப்பினர் நாட்டை பலவீனப்படுத்த முயற்சித்தார்கள்.

பொருளாதார பாதிப்பு மத்தியில் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்துள்ளோம் என்பதற்காக அவர் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாது.தவறான தீர்மானங்களுக்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது.அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது.

நாடு தற்போது ஸ்திரமடைந்துள்ளது.ஆகவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது.மக்களாணையை தெரிந்துக் கொள்ள அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தலை நடத்துமாறு அரச தலைவர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றார்.