முல்லைத்தீவு மின்சார சபையினரின் எல்லைக்குட்பட்ட முல்லைத்தீவு திருகோணமலை பிரதான வீதியில் முல்லைத்தீவில் இருந்து கொக்கிளாய் வரையான கிராமங்களில் இப்போது மின் துண்டிப்புக்களை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுதொகையில் மின்கட்டணம் உள்ள போதும் சிவப்பறிக்கை (Red Report- Red bill) வழங்கிவிட்டு மின்துண்டிப்பை மேற்கொள்வதனை அவதானிக்க முடிந்தது.
பெருந் தொகையில் செலுத்தப்படாத மின் கட்டணங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் மின்சார சபையினரின் இயல்பையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். மின் கட்டணத்தை செலுத்திய பின்னர் மீள் இணைத்தலுக்காக ரூபா 3000 அறவிடுவதாக அறிவுறுத்தியுள்ள போதும்(சிவப்பறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது) விரைவாக மீள் மின்னிணைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.
சிட்டை வழங்கப்பட்டு பத்து தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தும் விதிகளில் துண்டிக்கப்பட்டதும் மீளவும் இணைத்தலுக்கான ஒழுங்குகள் பற்றி எந்தக் குறிப்புக்களும் இல்லை என்பதும் இங்கே அவதானிக்க முடிந்தது.
இதனால் பொதுமக்கள் பணத்தை செலுத்திய பின்னரும் மின்சாரம் இல்லாது இருக்கின்றனர்.துண்டிப்புக்களை அடுத்து மின் கட்டணத்தை செலுத்திய பின்னரும் பணம் செலுத்தியமையை அழைப்பு நிலையங்களூடாக தெரியப்படுத்திய போதும் மீள் மின் இணைப்புக்காக நீண்ட நேரங்களை செலவிட வேண்டியுள்ளதாக இந்த இடரை எதிர்கொண்ட மக்கள் பலர் விசனம் தெரிவிக்கின்றனர்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் மின் சிட்டை வழங்கும் உத்தியோகத்தர் மின் சிட்டை யில் தன்னை தொடர்பு கொள்வதற்கான தொடர்பு இலக்கத்தையும் தன் தொடர்பான அறிமுகத்தையும் குறிப்பிட்டுச் செல்வார்.
இது போன்ற மின்துண்டிப்பு இடர்களை எதிர் கொள்ளும் போது பணம் செலுத்தப்பட்டு அதனை உறுதிப்படுத்தியதும் உடன் மின் மீள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அவர் உதவியதாகவும் மக்கள் கருத்துரைத்தனர்.
இப்போது மற்றொரு உத்தியோகத்தர்கள் கடைமையாற்றுகின்றார். அவரிடம் இத்தகையதொரு ஒழுங்கமைப்பை காண முடியவில்லை. இதனாலேயே மின் கட்டணத்தைச் செலுத்திய பின்னரும் மின் மீள் இணைப்புக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என மேலும் கூறினார்கள்.

