புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு(காணொளி)

302 0

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்து.

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று பகல் சுமார் இரண்டு மணி நேரமாக புத்தளம் சிரம்பியடி பிரதேசத்தில் வட பகுதியில் இருந்து புத்தளத்தின் ஊடாக கொழும்பு வீதியின் தூரப் பயணச் சேவையில் ஈடுபடும் பயணிகள் பஸ்களின் பயணிகளும், பஸ் சாரதிகளும் வீதியை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பொலிஸாருக்கு எதிர்ப்பை தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தால்குறித்த வீதியின் ஊடான வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

புத்தளம்- அநுராதபுரம் பிரதான வீதியில் பயணிக்கும் யாழ்ப்பாணம்- கொழும்பு, மன்னார்- கொழும்பு, அநுராதபுரம்- கொழும்பு கிளிநொச்சி-கொழும்பு, நானாட்டான்-கொழும்பு போன்று தூரப் பயண பஸ் சேவைகளுக்கு புத்தளம் சிரம்பியடி பிரதேசத்தில் போக்குவரத்துப் பொலிஸாரால் அந்த பஸ்களில் அதிகளவு பயணிகள் ஏற்றப்பட்டதற்காக தண்டப் பணம் செலுத்துவதற்கான பத்திரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே அங்கு இந்த பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இதன்போது தூரப் பயண பஸ்களின் சாரதிகள் கருத்து தெரிவித்த போது, இவ்வாறு அதிக பயணிகள் பஸ்களில் ஏறுவது கலா ஓயாவிலிருந்து புத்தளம் வரையில் மாத்திரமே என்றும், அவ்வழியில் வேறு போக்குவரத்துச் சேவைகள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு இப்பயணிகளை ஏற்றுவதாக தெரிவித்தனர்.

அதே போன்று இந்த பயணிகளை ஏற்றாது வந்தால் தம்மால் அவ்வழியால் பயணிக்கும் போது பல்வேறு பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடுவதால் மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த பயணிகளை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுவதாகவும்  சாரதிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் போக்குவரத்துப் பொலிஸார் இவ்வாறு அதிகளவில் தண்டம் செலுத்தும் வகையில் பத்திரங்களை வழங்குவதால் தம்மால் தமது தொழிலைச் கொண்டு செல்வதில் சிக்கல் தோன்றியுள்ளதாகவும் இதன் காரணமாகவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பகல் முதல் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட நேர்ந்ததாகவும் அவர்கள்; தெரிவித்தனர்.

தமக்கு இவ்வழியில் பயணிப்பதற்கு வேறு பொது போக்குவரத்து முறைகள் இல்லாத காரணத்தினால் இந்த பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளதால் இவற்றைப் பற்றி சிந்திக்காமல் பொலிஸார் தண்டம் செலுத்துவதற்கான பத்திரங்களை வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது என குறித்த பஸ்களில் பயணித்த பயணிகளும் இதன்போது தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் அவ்விடத்திற்கு வந்த புத்தளம் பொலிஸ் நிலைய தலமைப் பெறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன உள்ளிட்ட சுமார் 30 பேரளவிலான பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கொண்டனர்.

நேற்;றைய தினம் பொலிஸாரால் வழங்கப்பட்ட தண்டம் செலுத்துவதற்கான பத்திரத்தை இரத்துச்செய்து தமது சாரதி அனுமதிப் பத்திரங்களை மீள ஒப்படைத்தால் மாத்திரமே இந்த எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து விலகிச் செல்வதாக இதன்போது பஸ் சாரதிகளும், பயணிகளும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அனைத்து சாரதிகளையும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருமாறும் அங்கு வைத்து இது தொடர்பில் சுமுகமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்ததையடுத்து சாரதிகளும் பயணிகளும் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டுவிட்டு அங்கிருந்து விலகிச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.