இலங்கை தொடர்பான அறிக்கை – மனித உரிமைகள் ஆணையாளர் இன்று முன்வைக்கிறார்.

272 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தூதுக்குழுக்கு தலைமை ஏற்க வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா ஜெனிவா சென்றுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 13ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனிவாவில் சமர்ப்பித்திருந்தன.

இந்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதாக, அவுஸ்ரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

அத்துடன், மேலும் சில நாடுகளும் இந்த பிரேணைக்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இலங்கை தொடர்பான தமது அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹூசைன் இன்று முன்வைக்கவுள்ளார்.

இதில் 2015 ஜெனீவா பிரேரணை அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் அவதானம் செலுத்தவுள்ளார்.

இதேவேளை, வடமாகாண சபை உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என்பன ஜெனிவாவில் இடம்பெறும் பகுதிநேர அமர்வுகளில் பங்கேற்று தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாதுள்ளமை குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்து வருகின்றன.

இதனிடையே, அரசியல் தீர்வு விடயத்தில் தமது பிரச்சினைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என சர்வதேச நாடுகளிடம் வலியுறுத்த வடமாகாண முஸ்லிம் சிவில் சமூக ஒன்றியமும் ஜெனிவா சென்றுள்ளது.

அத்துடன், இலங்கை படையின் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என ஜெனிவாவில் நிரூபிப்பதற்காக ஒன்றிணைந்த எதிரணி சார்பில் ஜெனிவா சென்றுள்ள ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.