ஜெனீவா பிரேரணை – நாடாளுமன்றில் வாதம்

238 0

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த பிரேரணையை முன்னிட்டு, மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ்குணவர்தன அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இலங்கையின் உள்ளக பொறிமுறைக்குள் சர்வதேச நீதிபதிகளை இணைத்து கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் இந்த பிரேரணை ஊடாக இணங்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுத்து உரையாற்றினார்.

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில், மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த அறிக்கையில் மாத்திரமே சர்வதேச நீதிபதிகள் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாறாக பிரேரணையில் அவ்வாறான எந்த விடயமும் இல்லை என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கும் சாத்தியம் இலங்கையில் நடைமுறையில் உள்ள யாப்பில் இல்லை என்பதால், அதனை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளாது என்றும் உறுதியளித்தார்.

அதேநேரம், கடந்த காலங்களில் மகிந்த அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொது செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மர்சூசிக்கி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழுவுடன் தொடர்புகளை பேணி வந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

நியுயோர்க் சென்ற மகிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதிகள், தருஸ்மனிடம் பலவிடயங்களை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்ததுடன், அது தொடர்பான ஆவணப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.

இவ்வாறு பரிமாற்றிக் கொள்ளப்பட்ட ஆவணங்களை தாம் சபையில் முன்வைக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.