இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாகவும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினையும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நோக்கி நகர்த்துவதற்குரிய அடுத்தகட்டச் சாத்தியப்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா தீவிரமான கரிசனையுடன் ஆராய்ந்து வருகிறது.
குறிப்பாக, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான பிரிவினர், ஆசிய விவகாரங்களுக்கான பாதுகாப்பு பிரிவினர், செனட் குழுவின் வெளிவிவகார பிரிவினர் ஆகியோர் இந்த விடயம் சம்பந்தமாக கரிசனைகள் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ‘இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அதற்கு அப்பால் மீண்டும் தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு பதிலாக இலங்கை விடயத்தினை ஐ.நா.பொதுச்சபைக்கு பாரப்படுத்தி ஆகக்குறைந்தது ஐ.நா.செயலாளர் நாயகத்தின் விசேட கரிசனையின் கீழ் கலந்துரையாடுவதற்கான சூழலொன்றைத் தோற்றுவிப்பது பற்றி கவனம் செலுத்தப்பட் வருகின்றது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போதும், அசாதாரண காலத்தின்போதும், மீறப்பட்ட மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறச் செய்வதற்காக போர் முடிவுக்கு வந்த சூழலில் 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா, ‘இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல்’ எனும் தலைப்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முதற்தடவையாக நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, அமெரிக்கா, தொடாச்சியாக இலங்கை பற்றிய தீர்மானங்களின் ஆயுட்காலங்களுக்கு அமைவாக தீர்மானங்களை முன்னகர்த்தி வந்திருந்த போதும், பேரவையின் உறுப்புரிமையை அமெரிக்கா இழந்தமையால் இறுதியாக 51ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் சமர்பித்து நிறைவேற்றியிருந்தன.
இந்நிலையில், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக குறித்த தீர்மானத்தினை நிராகரித்து வருவதாக அறிவித்து வரும் நிலையில், மேற்படி தீர்மானத்தின் ஆயுட்காலம் நிறைவுக்கு வருகின்றபோது மீண்டும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் முன்னகர்த்தப்படுவது பொருத்தமானதாக அமையுமா என்ற கோணத்தில் பல்வேறு கலந்துரையாடல்கள் அமெரிக்காவினால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தரப்புக்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள் நாடுகளை கட்டுப்படுத்தும் வல்லமையை கொண்டிருக்காததன் காரணத்தில் அதற்க அப்பால் செல்வதற்கான முயற்சிகளை அமெரிக்காவே முன்னின்று எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
முதற்கட்டமாக, இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா.பொதுச்சபைக்கு பாரப்படுத்தி அதில் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை ஐ.நா.செயலாளர் நாயகம் ஊடாக முன்னெடுப்பதை நோக்கி நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் மற்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிஸ்தர்கள் தற்போதிருந்தே தீவிர கவனம் செலுத்துவதற்கு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

