நான் முதல்வன், மகளிர் உரிமைத் தொகை திட்டங்களின் தாக்கம் குறித்து அறிக்கை

103 0

நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களின் தாக்கம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மாநில திட்டக் குழுவின் 4-வது கூட்டம், குழுத் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில், மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவுக் கொள்கைகள், மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களின் பயன்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. திட்டக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், குழுவின் பணி, செயல்பாட்டை விளக்கினார்.

ஆட்சி செல்லும் பாதை சரிதானா?: இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சி செல்லும் பாதை சரிதானா என்பதை அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக் குழு செயல்பட்டு வருகிறது. மின் வாகனம், தொழில் 4.0, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்நி றுவனங்கள், துணி நூல், கைத்தறி, சுற்றுலா, மருத்துவ உரிமை, பாலின மாறுபாடு உடையோருக்கான நலன் ஆகிய கொள்கைகளை திட்டக் குழு தயாரித்து வழங்கியுள்ளது. கழிவு மேலாண்மை, நிலையான நிலப் பயன்பாடு, நீர்வள ஆதாரம், வேலைவாய்ப்பு மற்றும் திறன், வீட்டுவசதிக் கொள்கைகளை விரைவாக இறுதி செய்ய வேண்டும்.

அரசின் திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பது தொடர்பாக நீங்கள் தரும் ஆய்வறிக்கைகள்தான் முக்கியமானவை.

மகளிருக்கான இலவச பயணத்திட்டத்தால் மாதம் ரூ.800 முதல் ரூ.1,200 வரை சேமிக்கின்றனர் என்பதைவிட, பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளதுடன், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு அதிகமாகி இருக்கிறது என்பதும், வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்பதும்தான் முக்கியமானது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் கல்வியைப் பரவலாக்கவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பள்ளிக்குள் கொண்டுவரவும் பயன்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், அனைவருக்குமான சுகாதாரத்தை உறுதி செய்துள்ளது.

ஒருங்கிணைப்பு அவசியம்: நான் முதல்வன் திட்டம், கல்வி, அறிவாற்றல், திறமை, தன்னம்பிக்கையில் மாணவர்களை சிறந்தவர்களாக மாற்றியுள்ளது. இந்த ஆண்டு13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கியுள்ளோம். பெரிய பயிற்சி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கில் பணம் கட்டி அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை, அரசு கட்டணமின்றி கற்றுத் தருகிறது. இந்த திட்டம் மூலம் 1.74 லட்சம் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தை இன்னும் எப்படி செழுமைப்படுத்தலாம் என்று நீங்கள் பரிந்துரைக்க வேண்டும்.

விடியல் பயணம் திட்டம், முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஆகியவை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து திட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கைகள் பயனுள்ளதாக இருந்தன. அதேபோல, நான் முதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, மதிப்பீடு மற்றும் ஆய்வுத் துறை ஆகிய துறைகளையும் மாநில திட்டக் குழு இணைத்துக் கொண்டு செயல்படவேண்டும். இந்த ஒருங்கிணைப்பு மிக மிக அவசியம். நீங்கள் வழங்கும் பல்வேறு ஆலோசனைகளை, அரசுத் துறைகள் முழுமையாகவும், சரி யாகவும் பயன்படுத்துகிறதா என்பது குறித்து கள ஆய்வு மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைச் செயலர் கே.கோபால், நிதித் துறை செலவினப் பிரிவு செயலர் எஸ்.நாகராஜன் மற்றும் திட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அரசின் திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பது தொடர்பாக தரும் ஆய்வறிக்கைகள் முக்கியமானவை.