தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தேசிய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை அறிக்கை

130 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை அறிக்கை கிடைத்துள்ளதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பி்ன்னர் அதன் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனதுபுகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.மாலாஆகியோர் அடங்கிய அமர்வில்விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையம் தரப்பில் தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்துள்ளோம் என்றும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுஅளித்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது வழக்கை முடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும் அவரது பரிந்துரையின் அடிப்படையில் எந்தநடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இதில் பல்வேறு சட்ட விதிமீறல்கள் உள்ளன என குற்றம் சாட்டினார்.

அப்போது ஆணையம் தரப்பில், புதிதாக ஆதாரங்கள் ஏதும்இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம். ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என வாதிடப்பட்டது.

பின்னர் சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வுசெய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை, புலன்விசாரணை பிரிவின் அறிக்கைஅரசுக்கு கிடைத்துள்ளதா, ஒருவேளை அறிக்கை கிடைத்துஇருந்தால் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும்செப்.27-க்கு தள்ளி வைத்துள்ளனர்.