வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஐ.நா.வுக்கு மகஜர் கையளிப்பு

99 0
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க உடனடியாக சர்வதேச பொறிமுறையை ஐ.நா ஏற்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு வியாழக்கிழமை (21) யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மஜகஜர் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, ஐ.நா பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா பொதுச்சபையின் உறுப்பினர்களுக்கு ஒரு வெளிப்படையான முறையீட்டை முன்வைக்க விரும்புகிறோம்.

போர் முடிவுக்கு வந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உண்மையான நீதிப் பொறிமுறையை நிறுவி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் போர்க்குற்றவாளிகளுக்கு பொறுப்புக் கூறி தண்டனையைப் பெற்றுக் கொடுக்கவும் இலங்கை அரசின் தரப்பிலிருந்து இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இலங்கை அரசாங்கமானது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை முற்றாக புறக்கணித்ததுடன், அடிப்படை சர்வதேச நியமங்களுக்கு எதிராக செயற்பட்டது.

ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு எதிரான மீறல். ஜக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை நோக்கங்களை இலங்கை மீறியுள்ளது.

மனிதநேயம் மனித கண்ணியம் மற்றும் அனைத்துலக மனிதர்களுடைய அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க ஜக்கிய நாடுகள் சபை உறுதிபூண்டுள்ளதாக அதனுடைய சாசனம் வெளிப்படையாகக் கூறுகின்றது.

ஐ.நா சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கத் தவறிவிட்டது என்பதை எங்களுடைய அனுபவங்களின் ஊடாகவும் மற்றும் ஐ.நா குழு அறிக்கையில் பொதிந்துள்ள விபரங்கள் ஊடாகவும் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

ஜெனிவா ஒப்பந்தத்திறகு எதிரான மீறல் 1949ம் ஆணடு மாநாட்டின் போர் பிரதேசங்களில் சிக்கிய பொது மக்களைப் பாதுகாப்பதாகும்.

ஜெனிவா உடன்படிக்கையின் ஒரு சாட்சியான இலங்கை, சிவில் பாதுகாப்பு கோட்பாடுகளையும் மாநாட்டின் அடிப்படை விதிகளையும் இறுதி யுத்த நேரத்தில் மீறியது.

இலங்கையின் போர்க் குற்றங்கள்

ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் படி, இலங்கை அரச படைகள், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் செறிந்து இருந்த பகுதியில் (சூனியபிரதேசம்) கடுமையான குண்டுத் தாக்குதல்களை நடத்தியது மற்றும பாரிய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியது உறுதியாகியுள்ளது.

அரச படைகளால் பயன்படுத தப்பட்ட இரசாயண குண்டுகள், பொதுமக்களுடைய உடல்களில் எரிகாயங்களை உண்டு பண்ணி, இன்றும் மாறாத வடுக்களாக உள்ளன.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைகளின்படி போரின் இறுதிக்கட்டத்தில் 40000 பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் அரச படைகளினால் கொல்லப்பட்டனர்.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகளின்போது பெண்னின் உள்ளாடைகள், விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் இலக்கத்தகடுகளோடு மனித எச்சங்கள் போன்றன தோண்டி எடுக்கப்பட்டன.

ஆகவே  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பது ஐக்கிய நாடு சபையினுடைய முதன்மைப் பொறுப்பாக உள்ள நிலையில் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கு இலங்கை அரசுக்கு அழுதங்களைக் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொள்கின்றோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.