நெடுங்கேணியில் இளம்குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி

241 0
நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பத்தினர் பெற்ற நுண் கடணைச் செலுத்த முடியாத நிலையில் கடந்த சனிக்கிழமை தாயும் பிள்ளையும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் மதி- நந்தினி வயது 30 என்பவர் நுண்கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ளார். இருப்பினும் இவ்வாறு பெற்ற கடனை அதிக வட்டியின் காரணமாக செலுத்தமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. பணத்தை வழங்கிய நிறுவனத்தினர் பகலில் மாத்திரன்றி இரவு வேளைகளிலும் வீட்டிற்குச் சென்று பணத்தை கோரி நெருக்குதல் வழங்கியுள்ளனர்.
இதன் காரணமாக குடும்பத்தில் கணவன் மனைவி இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கணவன் வீட்டில் இருந்து வெளிச் சென்ற நேரம் மனைவி தனது 4 வயது ஆண் பிள்ளையையும் தூக்கி கொண்டு அருகில் உள்ள வயல் வெளிக்குச் சென்று அங்கே வயலின் பாவனைக்காக வைத்திருந்த கிருமி நாசினியை பிள்ளைக்கும் பருக கொடுத்ததோடு தானும் அருந்தியுள்ளார். குறித்த நேரம் அவ் வயலுக்கு பணிக்காக சென்ற ஏனைய விவசாயிகள் இதனை அவதானித்தமையினால் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
உடனடியாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும் பிள்ளையும் மேலதிக சிகிச்சைக்காக நெடுங்கேணி வைத்தியசாலையின் வைத்தியரின் முயற்சியோடு வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக தற்போது தாயும் பிள்ளையும் உடல் நலம் தேறிவருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இதேபகுதியில் முட்டுநோய் காரணமாக அவதிப்பட்ட மு.தர்மலிங்கம் வயது 50 என்பரும் நோயின் கொடுமை தாங்காது நேற்றுக் காலையில் கிருமிநாசினி உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.