தடுப்பிலிருந்து ஹரக் கட்டா தப்பிக்க முயற்சி

39 0

சி.ஐ.டியுடன் இணைக்கப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி.) ஒருவரை பொலிஸ்மா அதிபர் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சி.ஐ.டி. தடுப்புக் காவலிலிருக்கும் ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவின் தப்பிக்கும் முயற்சிக்கு அவர் உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை இரவு நேரம் சென்று பார்வையிட்ட குறிப்பிட்ட ஏ.எஸ்.பி., ‘ஹரக் கட்டா’ வழக்கு தொடர்பான விடயங்களை பல சந்தர்ப்பங்களில் விவாதித்ததாக தெரியவந்தது.

மேலும், ‘ஹரக் கட்டா’ தொடர்பான வழக்கை தன்னிடம் ஒப்படைக்குமாறு சி.ஐ.டி. உயர் அதிகாரிகளிடம் இவர்  கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த காரணங்களால் அவர் சி.ஐ.டியிலிருந்து மாற்றப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.