இஸ்லாமிய தேசத்தில் முதல் முறையாக இந்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்..!

314 0

இந்துக்கள் தமது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கும், சட்ட ரீதியான திருமண சலுகைகளை பெறுவதற்கும், 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அரசானது சட்டவாக்கத்தை அங்கீகரித்துள்ளது.

பாகிஸ்தானின் சிறுபான்மையினமான இந்துக்களை மையப்படுத்திய திருமண சட்டவாக்கத்தில், அந்நாட்டின் ஜனாதிபதி மம்கைன் உசேன் அங்கீகாரம் அளித்துள்ளார்.

குறித்த சட்டவாக்கத்தின் மூலம் இனி பாகிஸ்தானில், இந்துக்கள் திருமணம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. திருமணத்தின் போது இந்துக்கள் தங்கள் மதச்சடங்குகளை முறைப்படி செய்ய இச்சட்டம் பூரண மதசுதந்திரத்தை வழங்கியுள்ளது.

மேலும் கடந்த 70 வருடங்களாக, இந்துக்களுக்கான சட்டவாக்கத்தை வலியுறுத்தி அந்நாட்டு இந்துக்கள் அமைப்பு பல்வேறு விண்ணப்பங்களை முன் வைத்திருந்தது. அத்தோடு கடந்த வருடம் அந்நாட்டில் இந்துக்கள் அதிகமாக வாழும் சிந்து மாகாணத்தில், இந்து திருமணத்திற்காக தனி சட்டவாக்கமொன்றையும் உருவாக்கியிருந்தது.

இந்நிலையில் பிரதமர் நவாஸ் செரீப் தலைமையிலான அரசாங்கமானது, பாராளுமன்றத்தில் இந்து திருமண சட்ட வரைபை முன்மொழிந்திருந்த நிலையில் பாராளுமன்ற அனுமதியை பெற்று, நேற்று இறுதியாக ஜனாதிபதியின் கையொப்பத்துடன் சட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு இந்துக்கள் அமைப்பின் தலைவர் ரமேஷ்குமார் வாங்கவணி தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த சட்டவாக்கத்தின் மூலம் அந்நாட்டு இந்துக்களின் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதற்கும், அதற்காக அரசபதிவாளர்களை நியமித்து திருமணம், குடும்ப முறுகல்கள், மறுமணம் மற்றும் குடும்ப அமைப்பு உள்ளிட்டவிடயங்களில் சட்ட தலையீட்டை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.