ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வழிநடத்தியவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவே!

248 0

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை வழிநடத்தியவர் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண எனவும், அவரினால் வழிநடத்தப்பட்ட குழுவே சண்டேலீடர் பத்திரிகையாசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் கொலைசெய்ததென குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது, லசந்த விக்கிரமதுங்க துப்பாக்கிச் சூட்டினால் மாத்திரம் பலியாகவில்லையெனவும், அவரது தலையில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், குத்தப்பட்ட ஆயுதத்தின் ஒருபகுதி அவரது மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, ஊடகவியலாளர்களைத் தாக்குவதற்கென சிறப்புக் குழுவொன்றை இயக்கி வந்தார் எனவும், அக்குழுவினரே ஊடகவியலாளர்களான கீத் நெயார், உபாலி தென்னக்கோன் போன்றவர்கள் மீதும் தாக்குதலை நடத்தினர் எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.