பாரதிக்கும் நமக்குமான இடைவெளி மிகத் தூரம்! – பாரதியாரின் கொள்ளுப்பெயரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி

170 0

“பாரதிக்கும் நமக்குமான இடைவெளி மிகத் தூரமானது. பாரதி வந்தான், எண்ணற்ற நற்சிந்தனை மிகு கருத்துக்களை சொன்னான், நல்லன செய்தான்… ஆனால், அதற்கான பலனை நாம் அனுபவிக்கத் தெரியாமல் இருக்கிறோமே! ஒரு பக்கம் பாரதியை புகழ்ந்துவிட்டு, மறுபக்கம் அவன் சிந்தனைக்கு முரணாக செயற்படுகிறோம்….” என மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பெயரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

மானுடப் பற்றாளர், பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த மகாகவி, சமுதாய எழுச்சி மிகு கருத்துக்களை கடைக்கோடி மக்களிடத்திலும்  விதைத்த மக்கள் கவிஞன் சுப்பிரமணிய பாரதியார்.

உலகளவில் இன்று செப்டெம்பர் 11ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பாரதியாரின் 102வது நினைவுதினத்தை முன்னிட்டு பாடலாசிரியரும் இசைக் கலைஞரும் பாடகரும் பாரதியாரின் கொள்ளுப்பெயரனுமான ராஜ்குமார் பாரதி வீரகேசரிக்கு வழங்கிய செவ்வி…

நெற்றியில் திலகம், தலைப்பாகை, பெரிய மீசை, கறுப்பு ஆடை – இதுதான் எங்களுக்குத் தெரிந்த பாரதி…. ஆனால், அவர் வம்சத்தில் பிறந்த நீங்கள், இதில் எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கிறீர்களே, எப்படி? 

பாரதி 39 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் இன்னும் பிந்திய காலத்தில் வாழ்ந்து, நானும் கிட்டத்தட்ட அவர் காலத்துக்கு நெருங்கி பிறந்திருந்தால் மீசை வைத்திருக்கலாம். ஆனால், நானும் சின்ன மீசை வைத்த காலங்கள் எல்லாம் உண்டு. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மீசையை எடுத்துவிட்டேன். அதனால் மீசை இல்லையே தவிர, புறச்சின்னங்கள் இல்லையே தவிர, என் அகத்தில் பாரதி வாழ்கிறார்.  அவர் சிந்தனைகளும் அப்படியே இருக்கின்றன.

‘பாரதியின் கொள்ளுப்பெயரன்’ என்பதை எண்ணி என்றேனும் கர்வப்பட்டிருக்கிறீர்களா?  

கர்வம் தேவையில்லை. களிப்பும் பெருமிதமும் ஏராளம் இருக்கிறது. ஒரு அவதாரப் புருஷருடைய பரம்பரையில் வந்திருக்கிறேன் என்பதே பெரிய கொடுப்பனை.

பாரதியையும் பாரதியார் கவிதைகளையும் அவரது இரத்த உறவு வாரிசான நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஆரம்பத்தில் பாரதியாரின் கவிதைகளை நான் ஒரு வெளிநபராக இருந்துதான் பார்த்தேன். அந்த வயதில் அவரது கவிதையின் தாக்கம் எனக்கு புரியவில்லை.

ஐந்தாறு வயதில் எனக்கு தெரிந்ததெல்லாம், பாரதி என்பவர் ‘யாரோ ஒரு பெரிய மனிதர், பலர் மதிக்கும் ஒரு மாமனிதர்…’ அவ்வளவுதான்.

வெளியிடங்களிலும் பல நிகழ்ச்சிகளிலும் பாரதியின் புகைப்படத்தை பார்க்கும்போது, ‘அடடே! நம் வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் உள்ள ஒருவருடைய நிழற்படம் இங்கேயும் வைக்கப்பட்டிருக்கிறதே’ என்று நினைத்துக்கொள்வேன்.

நாளடைவில் நானும் பாரதியின் பாடல்களை பாட நேரிட்டு, அந்த பாடல்களை உள்வாங்க ஆரம்பித்தபோதே அதன் தாக்கம் எனக்கு புரியத் தொடங்கியது.

அந்த உள்வாங்கலின்போது, நான் அந்த பரம்பரையைச் சேர்ந்தவன் என்கிற எண்ணமும் இணைந்துகொண்டது.

‘ஆஹா! எப்பேற்பட்ட ஒரு பேறு! அந்த படைப்புக்கு ஒரு நன்றியுணர்தல், நான் பாரதி பரம்பரையை சேர்ந்தவன் என்கிற ஒரு காரணத்துக்காக மக்கள் என்னில் அன்பு வைத்திருக்கிறார்கள். அந்த அன்புக்கு தகுதியானவராக நான் நடந்துகொள்ள வேண்டும்’ என்கிற பொறுப்புணர்வு என்னில் ஏற்பட்டது.

“பாரதியைத்தான் பார்க்க முடியவில்லை; உங்களையாவது பார்க்கிறோமே” என பலரும்   சொல்கிறார்கள். கச்சேரி நிகழ்வுகளில் கூட “பாரதியைத்தான் தொட முடியவில்லை… உங்கள் கையையாவது தொட்டுப் பார்க்கிறேன்…” என்று கூறி என் கைகளை பற்றிக்கொள்வார்கள்.

நாம் பாரதியின் காலத்தில் வாழாமல் போய்விட்டோமே என்ற சளிப்பு பாரதி அன்பர்களுக்கு இருக்கலாம். அதேநேரம், ‘பாரதி பரம்பரையை சேர்ந்த ஒருவர் நம் மத்தியில் வாழ்கிறார்’ என்றெண்ணி, ஒரு குழந்தை மீது செலுத்தக்கூடிய அன்புக்கு நிகராக என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்.

பரதநாட்டிய அரங்கேற்றத்துக்காக ‘தொன்மாவிலங்கை’ என்ற தொனிப்பொருளில் இலங்கையை மையப்படுத்தி நீங்கள் அமைத்த பாடல்களை பற்றி கூறுங்கள்…

‘தொன்மாவிலங்கை’ என்கிற அந்த படைப்பினுடைய காரணகர்த்தாவே நடனக் கலைஞர் திவ்யா சுஜேன்தான். இளம் வயதில் புதிதான தலைப்புகளில் சிந்திக்கின்ற திறனுடைய அவர், இலங்கையை கருப்பொருளாக கொண்டு உருப்படிகளுக்கு பாடல்கள் அமைத்து தரும்படி கேட்டார். உடனே சம்மதித்தேன்.

பாடல் வரிகளை அமைக்க தேவையான  தகவல்களை எனக்கு வழங்குமாறு அவரிடம் கேட்டேன்.

இது நாட்டியத்துக்கான படைப்பு என்ற அடிப்படையில், ஆடலுக்கு மிகப் பெரும் வாய்ப்பாக இப்பாடல்கள் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில், முதலில் பொதுவான கருத்து என்னவோ அதை எடுத்துக்காட்டி, பின்னர், நாட்டின் புராதனங்கள், புராணங்களில் அங்கம் வகிக்கும் விடயங்கள் – கதைகள், நாட்டுக்கே உரித்தான பெருமைகள், இந்த நாட்டில் வாழ்ந்த மகான்களின் உன்னதங்களை பற்றி கூற முடிந்தது.

குறிப்பாக, மகா பண்டிதனான இராவணனை, கருணைமயமான புத்தரை பாடல்களினூடாக காண்பித்தோம்.

கதிர்காமம், பஞ்ச ஈஸ்வரங்கள், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் என பல விடயங்களை எடுத்துக்காட்டினோம்.

ஏனோ! இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அழகையே கெடுப்பது போல் தேவையற்ற போராட்டங்கள், பிரிவினைகள், இன பேதங்களை விதி திணித்துவிட்டது. இவற்றையும் சொல்லத்தானே வேண்டும்!

நிறைவில், ஒரு நேர்மறை கருத்தினை முன்னிறுத்தும் விதமாக, “கோடி வளங்கள் நிறைந்தது இந்த நாடு” என சரணத்தை கையாண்டு, சிகிரியா ஓவியங்கள், தேயிலை தோட்டங்கள், அழகான மலைகள் முதலான இலங்கை திருநாட்டின் வளங்களையும் சிறப்புகளையும் பாடல்களில் இணைத்திருந்தோம்.

இலங்கையில் உங்களை கவர்ந்தது எது?

இலங்கை மிகவும் அழகான நாடு. இங்குள்ள கடல் அழகு, நீர் அழகு, மலைகள் அழகு. இங்கு வாழும் மக்கள் அன்பானவர்கள், தங்கமானவர்கள். இன்முகம் கொண்டவர்கள்.  அது போதும் எனக்கு. இயற்கையும் அன்பும் நிறைவாக இருந்தால் இதை விட வேறென்ன வேண்டும்.

அந்நியர்கள் என்ற உணர்வே ஏற்படாதளவு அயல் வீட்டுக்கும், உறவினர்கள் வீட்டுக்கும் போய் வருவது போல் இலங்கைக்கு வந்து போகிறேன்.

இதற்காகத்தான் பாரதி சொன்னான், “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று.

“காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்றும்

“வானை அளப்போம்,

கடல் மீனை அளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்றும் சொன்ன பாரதி, ‘இதோ, நமக்கு மிகப் பக்கத்தில் இருப்பவர்களை சென்று பார்த்துவிட்டு வருவோம். அதற்கொரு பாலம் போடுங்கள்’ என்றான்.

பாரதி ‘சிங்களத் தீவு’ என்று எழுதியதை ஒரு சிலர் விமர்சிக்கிறார்களே… அதற்கு உங்கள் பதில்?

விருப்பு, வெறுப்பை தாண்டி சிந்தித்துப் பார்த்தால், இந்த நாட்டின் பெயர் ஸ்ரீலங்கா – இது ஒரு பெயர். அதேபோல சிங்களம் – சிங்களத் தீவு என்பதும் ஒரு பெயர். இந்த சொல் அவர் காலத்தில் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால், இந்த பெயரை அவர் கையாண்டிருக்க மாட்டார்.

உலகெங்கும் தமிழை பரப்புவதில் ஏதும் தடைகள் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா?

தடைகள் என்று எதுவுமே கிடையாது. பிரிட்டன், பிரான்ஸ், கனடா என உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழில் நிகழ்ச்சிகளை நடத்துவதிலோ தமிழால் நட்புறவு பாராட்டுவதிலோ தமிழை பரப்புவதிலோ என்ன தடை வந்துவிடப்போகிறது?

ஒரு வேளை வேற்றுமொழி பேசக்கூடியவர்கள் பார்வையாளர்களாக இருந்தால், அவர்களுக்காக நாம் நம் கலையை கொஞ்சம் இலகுபடுத்தலாம். அதில் தவறில்லை.

பாரதி பாடல்கள், கவி‍தைகளை தழுவி புதிதாக பாடல்களை அமைப்பதில் உள்ள சவால்கள்?

அந்த பாடல்களை சரியான முறையில் அணுகி, அவற்றை நம் படைப்பினூடாக வெளிப்படுத்தும் திறன் இயல்பாக வர வேண்டும். பாடுவதை ஒரு தொழிலாக செய்தால் கூட அதற்கென அளவுகளோ, திட்டங்களோ எதுவும் கிடையாது. ஒரு கலைப் படைப்புக்கான திட்டமிடலை பற்றி சிந்திக்கலாம், முயற்சிக்கலாம். ஆனால், மக்களின் தேவைகளையும், ரசனையையும் புரிந்துகொண்டு படைப்பதுதான் முக்கியம்.

பாரதியின் கவிதைகளில் உங்களை தூங்கவிடாமல் செய்த கவிதை எது?

பாரதியாரின் கவிதைகள் அனைத்துமே என் விருப்பத்துக்குரியவைதான். குறிப்பாக, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று பாடியிருக்கிறான்.

வாழ்க்கையில் வசதியில்லை; உணவில்லை; கையில் பணம் இல்லை; வெளிப்படையாக பல துன்பங்களை அனுபவிக்கும் நிலையில் கூட ஒருவனால் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று எப்படி பாட முடிகிறது? அவனது நிலை எத்தகையது? ஆச்சரியம்! இதுவே இந்த பாடலை தனித்து நிறுத்துகிறது.

பாரதி நிறைவு செய்யாத சில கவிதைகளை பூரணப்படுத்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டதுண்டா?

சில பாடல்களே முற்றுப் பெறாமல் விடப்பட்டிருந்தன. எனக்கு முன்னரே சிலர் அந்த பாடல்களை நிறைவு செய்திருக்கிறார்கள். பாரதியின் மனைவி செல்லம்மா, பாரதி ஆசிரமத்தின் பதிப்பு, செல்லம்மாவின் அண்ணனான அப்பாத்துரை, இவர்கள் எல்லோரும் சேர்ந்து கவிதைகளில் விட்ட குறை தொட்ட குறையை நிவர்த்திக்க அப்போதிருந்த சுத்தானந்த பாரதி, கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை போன்றவர்களை கொண்டு சில பாடல்களை பூர்த்தி செய்தனர். அதனால் அவற்றை முழுமையாக்கும் பணியில் நான் ஈடுபடவில்லை.

நீங்கள் கவிதைகள் எழுதுவது குறைவு என கேள்விப்பட்டிருக்கிறேன்… உண்மையா?

ஆமாம். நான் நிறைய பாடல்களை எழுதியிருக்கிறேன். ஆனால், அந்தளவுக்கு கவிதைகள் எழுதியதில்லை. கவிதை என்பது வேறு. கவிதைகளை ரசிக்கக்கூடிய கவியுள்ளம் எனக்குண்டு. ஏராளமான கவிதைகளை வாசிப்பதால் கவிதைக்கே உரித்தான சந்த ஓசை, தாளக்கட்டின் அமைப்பு என்னவென்று தெரியும்.  ஆனால், கவிதைக்கான இலக்கணத்தை முறையாக நான் கற்கவில்லை. ஒருவேளை கற்றால், கவிதைகள் எழுதலாம்.

பாடல்களை எழுதுவதற்காக, தாளத்துக்கும் இசைக்கும் தக்கபடி வரிகளை அமைக்கவும் கருத்தினை பதிவு செய்யவும் தெரிந்து வைத்திருப்பதே போதுமானது.

‘இந்த ஒரு விடயத்துக்காகவே பாரதி இன்றைக்கு நம் மத்தியில் இருந்திருக்க வேண்டும்’ என்று நீங்கள் கருதக்கூடிய விடயம் ஏதும் உண்டா?

இல்லை, நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்த பிறவிப் படைப்புக்கு சில திட்டங்கள் உள்ளன. அது, அவ்வப்போது ஒவ்வொருவரை உலகத்துக்கு வெளிப்படுத்தும்.

“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா!

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்…”  என்று பாரதி தன்னை சொல்கிறான்.

ஆகவே, பாரதி போன்ற அவதாரங்கள் எப்போது மானிட உலகத்துக்கு தேவையோ அப்போது அனுப்பப்படுவார்கள். அதை நாம் பார்த்து ரசித்து வியக்கலாமே தவிர, ‘மறுபடியும் வரலாமே’, ‘ஒருவேளை வந்தால்…’ என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை. எப்போது வரவேண்டுமோ அப்போது பாரதி வருவான்.

கற்பனையில் தோன்றியதை கேட்க விரும்புகிறேன்… அப்படி ஒருவேளை பாரதி மீண்டும் பிறந்து, உங்கள் முன் தோன்றினால் அவரிடம் என்ன கேட்பீர்கள்?

நான் அந்த கற்பனைக்குள் போவதில்லை. அது நடைமுறைக்குப் பொருந்தாத விடயம்.

பாரதி இத்தனை பாடல்களை பாடியும், கவிதைகளை எழுதியும் நமக்குள் வேற்றுமை இருக்கத்தானே செய்கிறது. அவனுக்கும் நமக்குமான இடைவெளி மிகத் தூரம்.

ஒரு பக்கம் பாரதியை புகழ்ந்துவிட்டு, மறுபக்கம் அவர் சிந்தனைக்கு முரணாக செயற்படுகிறோம். அதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

‘ஒரு பாரதி’ வந்தும் கூட எதுவும் நடந்துவிடவில்லையே!

பாரதி வந்தான், எண்ணற்ற நற்சிந்தனை மிகு கருத்துக்களை சொன்னான், நல்ல விடயங்களை செய்தான்… ஆனால், அதற்கான பலனையே நாம் அனுபவிக்கத் தெரியாமல் இருக்கிறோமே!

இன்னுமின்னும் பிளவுகள், பேதங்கள், சண்டைகள், போராட்டங்கள்….! எதுவும் தீரவில்லை. ஆகவே, இதற்கு ஒரு விடியல் வரட்டும்! அதன் பிறகு தேவைப்பட்டால் பாரதி வருவான்… வேறு வடிவில் வருவான்!

இலங்கையில் உள்ள பாரதி அபிமானிகளிடம் சில வார்த்தைகள்…

இலங்கையில் கோடான கோடி பாரதி அபிமானிகள் உள்ளனர். பாரதி ரசிகர்கள் பத்து பேர் இருந்தால், நூறு பேருக்கு சமம்.

எல்லோரும் பாரதியின் வரிகளை உள்வாங்கியவர்கள். அவ்வரிகளில் உள்ள உயிர்த்துடிப்பை முழுமையாக உணர்ந்தவர்கள். இந்த உணர்வுகளுக்கும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கும் இடை‍யே தொடர்பிருப்பதாக கருதுகிறார்கள். அதனால்தான் அந்த பாடல் வரிகள் இந்நாட்டு மக்களிலும் தாக்கம் செலுத்துகின்றன.

ஆகவே, எங்கெல்லாம் பாரதி விழா கொண்டாடுகிறார்களோ, எங்கெல்லாம் பாரதி அன்பர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் வாழும் அன்பர்களே, பாரதியின் சிந்தனைக்கும் நம் சிந்தனைக்குமான இடைவெளியை குறைக்க நாம் முற்படுவோம்… அதுவே போதும்!

நேர்காணல் : மா. உஷாநந்தினி