வடக்கு, கிழக்கில் தொடரும் தீவிர பௌத்தமயமாக்கல் இனங்களுக்கிடையிலான வன்முறையாக நிலைமாற்றமடையக்கூடும்

44 0

தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் தீவிர பௌத்தமயமாக்கலை ஆவணப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தவறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், அரச கட்டமைப்புக்களின் ஆதரவுடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கு இடையிலான வன்முறையாக நிலைமாற்றமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, அயர்லாந்து தமிழர் பேரவை, அமைதி மற்றும் நீதிக்கான ஒருங்கிணைப்புக்குழு, சுவிஸ்லாந்து தமிழ் நடவடிக்கைக்குழு மற்றும் அமெரிக்க தமிழ் நடவடிக்கைக்குழு ஆகிய 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்குறிப்பிடப்பட்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் நிலவும் குறைபாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உகந்த சூழல் இன்மை என்பவற்றை அடிக்கோடிட்டுக் காண்பித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கடந்த 6 ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டுள்ளார். உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கும் அதேவேளை, அதில் உள்ளடக்கப்படவேண்டிய மேலும் சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

‘இலங்கையில் அனைத்து மட்டங்களிலும் நிலவும் பொறுப்புக்கூறல்சார் குறைபாடு நாட்டின் அடிப்படை மனித உரிமை பிரச்சினையாகக் காணப்படுகின்றது’ என்று உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதுடன், சிங்கள பௌத்த தேசியவாதத்தின் விளைவாக மட்டுமீறிய அளவில் மத்திய மயப்படுத்தப்பட்ட அதிகாரங்களே அடிப்படை அரசியல் பிரச்சினையாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

அதேபோன்று உண்மை, பொறுப்புக்கூறல், இழப்பீடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய கூறுகளை ஒன்றிணைக்கும் வகையில் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையொன்றை ஸ்தாபிக்குமாறும், அப்பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும். இருப்பினும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அடையப்பட்டுள்ள தோல்வி மற்றும் அச்சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு என்பன குறித்து உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டிருப்பதுடன் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் குறைபாடுகள் தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் 10 பேரின் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல், இந்துக்களின் வணக்கத்தலங்களை அழித்தல், இந்துக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதைத் தடுத்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் தீவிர பௌத்தமயமாக்கலை ஆவணப்படுத்துவதற்கு உயர்ஸ்தானிகர் அலுவலகம் தவறியிருக்கின்றது. அரச கட்டமைப்புக்களின் ஆதரவுடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கு இடையிலான வன்முறையாக நிலைமாற்றமடையக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு மற்றும் வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் என்பன தொடர்பில் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும், உண்மையில் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மக்கள் தொடர்ந்தும் மட்டுமீறிய இராணுவப்பிரசன்னத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்துவருகின்றனர்.

மேலும், உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை செயன்முறைகளுக்கு அப்பால் குமுதினி படகு படுகொலைகள் (1985), சத்துருக்கொண்டான் படுகொலைகள் (1990), குமாரபுரம் படுகொலைகள் (1996), 1983 கறுப்பு ஜுலை கலவரங்கள், பாடசாலைகள், தேவாலயங்கள் மற்றும் கோயில்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் என்பன தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை வழிநடத்தும் குழு ஆகியவற்றிடம் வேண்டுகோள்விடுக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.