எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

177 0

உலக நாடுகள் இலங்கைக்கு உதவிசெய்ய முன்வரும் நிலையில் உள்நாட்டு பிரச்சினைகளை எதிர்க்கட்சி சர்வதேசத்துக்கு தெரிவிப்பதன் மூலம் கிடைக்க இருக்கும் உதவிகள் இல்லாமல்போகும் அபாயம் இருக்கிறது.

அதனால் எதிர்க்கட்சிகள் நாடு தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் ஜயமான்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் அந்த நாட்டுக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என வெனிசுலா, நைஜீரியா லாவோஸ் போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த நாடுகள் எமது நாட்டுடன் மிகவும் நெருக்கமான நாடுகள் அல்ல. என்றாலும் மனிதாபிமான ரீதியில் சிந்தித்து அந்த நாடுகள் இவ்வாறு எமது நாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கின்றன.

அதேபோன்று கடந்த வாரம் இந்தியாவில் இடம்பெற்ற ஜீ 20 மாநாட்டின்போதும் அமெரிக்க ஜனாதிபதி உட்பட பல நாடுகள் இலங்கைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. சர்வதேச நாடுகளின் உதவி இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அதனால்தான் ஜனாதிபதி சர்வதேச நாடுகளின் தலைவர்களை சந்தித்து நாட்டுக்கு தேவையான உதவிகளை கோரி வருகிறார்.

இவ்வாறான நிலையில் நாட்டின் எதிர்க்கட்சி குறுகிய அரசியல் நோக்கங்களை கைவிட்டு ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே தற்போது அவர்கள் நாட்டுக்கு செய்யவேண்டிய பொறுப்பாகும். ஆனால் எதிர்க்கட்சிகள் உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு எடுத்துச்செல்வதன் மூலம் சர்வதேச நாடுகளின் உதவிகள் எமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது.

குறிப்பாக நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு, வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. நாடு வங்குராேத்து அடைந்துள்ளமையே இந்த நிலைக்கு காரணமாகும்.

நாடு வங்குராேத்து அடைய ரணில் விக்ரமசிங்க பங்காளியாக இருக்கவில்லை. மாறாக வங்குராேத்து அடைந்திருக்கும் நாட்டை மீட்பதற்கு யாரும் முன்வராத நிலையில் நாட்டை கட்டியெழுப்பவே ரணில் விக்ரமசிங்க இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் எதிர்க்கட்சிகள் இந்த நிலையை விளங்கி பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அத்துடன் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்கட்சியினர் அவர்களை சந்தித்து, அரசாங்கத்தின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்ளுக்கு தெரிவிக்கப்போவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் விடயங்களை கேட்டு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நின்றுவிட்டால் நாடு மீண்டும் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். இதனால் நாடடு மக்களே பாதிக்கப்படப்போகின்றனர்.

எனவே நாட்டின் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். நாடு ஸ்திரமானதொரு நிலைக்கு வந்த பின்னர் எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.