தேசிய ஐக்கியத்திற்கு தடையேற்படுத்தும் செய்திகளே அதிகளவில் வெளியிடப்பட்டு வருகின்றனவாம்!

349 0

தேசிய ஐக்கியத்திற்கு காரணமாக அமையும் செய்திகளும் கட்டுரைகளும் குறைந்த அளவிலேயே ஊடகங்களில் வெளியாகி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஐக்கியத்திற்கு தடையேற்படுத்தும் செய்திகளே அதிகளவில் வெளியிடப்பட்டு வருவதால், ஊடகங்கள் அப்படியான செய்திகளை வெளியிடுவது குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிகம பிரகடனம் மீதான ஒரு மீள்பார்வை என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனை பாக்கீர் மாக்கர் மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் விடயங்கள் பத்திரிகைகளில் குறைவு. நான் தமிழ் பத்திரிகைகளையே அதிகம் படிப்பேன்.ஞாயிறு பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால், ஒரு நாடாக கட்டியெழுப்பபடும் விடயங்களுக்கு எதிரானவை அதிகமாக உள்ளன.இது தேசிய ஐக்கியம் என்ற வீதியின் பயணத்திற்கு செய்யும் தடை. ஊடகங்கள் ஒரு விடயத்தை இரண்டாக சிந்திக்க முடியும்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படுவது குறித்து அரசியல்வாதிகள் பல்வேறு கதைகளை கூறிவருகின்றனர். அரசியலமைப்பு மரண பொறி என்று கூறுகின்றனர்.

எனினும் ஊடகங்கள் அவர்களிடம் கேள்விகளை எழுப்புவதில்லை. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரும் யோசனைக்கு 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்தனர்.புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வருது குறித்து விமர்சிப்போரிடம் ஊடகங்கள் கேள்விகளை எழுப்புவதில்லை என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் இம்தீயாஸ் பாக்கீர் மாக்கர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பேராசிரியர் சந்திரசிறி ராஜபக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.